உணவு தேடி வந்த போது குடிநீர் கிணற்றுக்குள் தவறி விழுந்த கரடிகள்

5 hours ago 2

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஜக்கனாரை ஊராட்சிக்கு உட்பட்ட தும்பூர் கிராமத்தில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் தும்பூரில் இருந்து சேலவை, பெட்டட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 150 வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் கிணற்றின் மேல் பகுதி மூடப்பட்டு உள்ளது. இருப்பினும், பராமரிப்பு பணிக்காக 2 இடங்களில் சிறிய பகுதி மட்டும் மூடப்படாமல் இருந்தது.

இந்தநிலையில் நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வந்த 2 கரடிகள் அப்பகுதியில் உலா வந்தன. அப்போது அவை தவறி கிணற்றுக்குள் விழுந்தன. பின்னர் கரடிகள் வெளியே வர முடியாமல் தவித்தது. அதோடு கிணற்றுக்குள் தண்ணீர் இருந்ததால், தத்தளித்தபடி உயிருக்கு போராடின. இதை கண்ட அப்பகுதி மக்கள் கோத்தகிரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் கோத்தகிரி வனச்சரகர் செல்வராஜ் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரடிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கரடிகள் கிணற்றில் இருந்து வெளியே வருவதற்கு ஏதுவாக கிணற்றுக்குள் 2 ஏணிகளை கட்டி இறக்கினர். சற்று நேரத்திற்கு பின் கரடிகள் அந்த ஏணியின் வழியாக ஒன்றன் பின் ஒன்றாக ஏறி வந்தன. தொடர்ந்து அருகில் இருந்த புதர் மறைவில் ஓடி மறைந்தன.

இதையடுத்து வனத்துறையினர் கரடிகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேர போராட்டத்திற்கு பின் 2 கரடிகளையும் வனத்துறையினர் உயிருடன் மீட்டனர். 2 கரடிகள் குடிநீர் கிணற்றுக்குள் விழுந்தது குறித்த தகவல் பரவியதால், அதை வனத்துறையினர் மீட்கும் பணியை காண பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Read Entire Article