
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நடக்கும் 'ஜனநாயகன்' படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்துகொள்வதற்காக, சென்னையில் இருந்து அவர் விமானம் மூலம் மதுரை சென்ற நிலையில், விஜய்யை பார்க்க, காலை முதலே அவரது கட்சியினர், ரசிகர்கள் மதுரை விமான நிலைய பகுதியில் திரண்டனர்.
இந்த சூழலில் விஜய்யை பார்ப்பதற்காக பணி நேரத்தில் அனுமதி கேட்டு சென்ற காவலர், சீருடை இல்லாமல் கட்சிக்கொடி அணிந்துகொண்டு விஜய்யை வரவேற்றுள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாகி விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த வீடியோ ஆணையர் லோகநாதனின் பார்வைக்கு சென்றதை தொடர்ந்து, காவலர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக மதுரை தெப்பக்குளம் குற்றப்பிரிவு காவலராக பணியாற்றி வருபவர் கதிரவன் மார்க்ஸ், விளக்குத்தூண் ஸ்டேஷனில் மாற்றுப்பணியில் இருந்தார். நேற்று முன்தினம் மதியம் மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் சித்திரைத் திருவிழாவில் அவருக்கு பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் எமர்ஜென்சி என பர்மிஷன் வாங்கிக்கொண்டு த.வெ.க. தலைவர் விஜய்யை பார்க்கச்சென்றதால் அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.