
கேப்டவுன்,
தென் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ரபாடா. இவர் நடப்பு ஐ.பி.எல். தொடரில் குஜராத் அணியில் இடம் பிடித்திருந்தார். முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய நிலையில், சொந்த காரணத்திற்காக உடனடியாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார். இவர் மீண்டும் எப்போது அணியில் இணைவார் என எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், போதைப்பொருள் சோதனையில் மகிழ்ச்சி அல்லது உடல் சோர்வை போக்குவதற்கான போதைப்பொருள் (recreational drug) பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளதாகவும், இதனால் தடை பெற்றுள்ளேன் எனவும் ரபாடா கூறியுள்ளார். இது தொடர்பாக ரபாடா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நான் ஏமாற்றிய அனைவருக்காகவும் நான் மிகவும் வருந்துகிறேன். கிரிக்கெட் விளையாடும் பாக்கியத்தை நான் ஒருபோதும் அற்பமாக எடுத்துக்கொள்ள மாட்டேன். இந்த பாக்கியம் என்னை விட மிகப் பெரியது. இது எனது தனிப்பட்ட விருப்பங்களை விட அதிகம். நான் தற்காலிக இடைநீக்கத்தை அனுபவித்து வருகிறேன், நான் விளையாட விரும்பும் விளையாட்டுக்குத் திரும்புவதை எதிர்நோக்குகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.