வதோதரா: விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் போட்டித் தொடரின் 2வது அரை இறுதிப் போட்டியில் நேற்று மகாராஷ்டிரா அணியை 69 வித்தியாசத்தில் விதர்பா அணி வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. விஜய் ஹசாரே கோப்பைக்காக நேற்று முன்தினம் நடந்த முதலாவது அரை இறுதிப் போட்டியில் கர்நாடகா அணி வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதனுடன் மோதும் மற்றொரு அணியை தேர்வு செய்யும் 2வது அரை இறுதிப் போட்டி, வதோதராவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற மகாராஷ்டிரா பந்து வீச்சை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய விதர்பா அணியின் துருவ் ஷோரி, யாஷ் ரத்தோட் எந்தவித சிரமமும் இன்றி பந்துகளை சிதறடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
துருவ் ஷோரி 114, யாஷ் ரத்தோட் 116 ரன் குவித்து அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றனர். அணியின் ஸ்கோர் 224 ஆக இருந்தபோது ரத்தோட் அவுட்டானார். தொடர்நது ஷோரியும் பெவிலியன் திரும்பினார். பின், கேப்டன் கருண் நாயரும், ஜிதேஷ் சர்மாவும் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். 3வது விக்கெட்டாக 51 ரன்னில் ஜிதேஷ் சர்மா அவுட்டானார். கடைசியில் 3 விக்கெட் இழப்புக்கு விதர்பா 380 ரன் குவித்தது. இதையடுத்து 381 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மகாராஷ்டிரா களமிறங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்ததால், 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 311 ரன் மட்டுமே எடுத்த மகாராஷ்டிரா, 69 வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் விதர்பா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டி நாளை நடக்கிறது.
* ரன் குவிப்பில் மெகா சாதனை சூப்பர் மேன் கருண்: விஜய் ஹசாரே தொடரில் 752 நாட் அவுட்
விஜய் ஹசாரே கோப்பைக்காக கடந்த 6 போட்டிகளில் அவுட்டாகாமல் 5 சதங்களுடன் 664 ரன் குவித்திருந்த விதர்பா அணி கேப்டன் கருண் நாயர், மகாராஷ்டிரா அணியுடன் நேற்று நடந்த போட்டியிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நேற்றைய போட்டியில் 3வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கருண் நாயர் வெறும் 44 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு அவுட்டாகாமல் 88 ரன் குவித்தார். இதில் 5 சிக்சர்கள், 9 பவுண்டரிகள் அடங்கும். முதலில் களமிறங்கிய துவக்க வீரர்கள் துருவ் ஷோரி, யாஷ் ரத்தோட் 34.4 ஓவர்கள் ஆடி முதல் விக்கெட்டுக்கு 224 ரன் குவித்தனர். இதனால், கருண் நாயர் பேட்டிங் செய்யும்போது அவருக்கு போதிய ஓவர்கள் கிடைக்காததால் 6வது சதம் அடிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. இந்த ரன்னுடன் சேர்த்து, கருண் நாயர் 7 போட்டிகளில் அவுட்டாகாமல் 752 ரன் குவித்து மெகா சாதனையை படைத்துள்ளார்.
The post விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் விதர்பா இறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.