அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும்: கமிஷனர் தகவல்

7 hours ago 2

அருப்புக்கோட்டை, ஜன.16: அருப்புக்கோட்டை நகராட்சி சாதாரணக்கூட்டம் நகர்மன்ற கூட்டரங்கில் நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் தலைமையில் நடந்தது. நகராட்சி கமிஷனர் ராஜமாணிக்கம், பொறியாளர் அபூபக்கர் சித்திக், மேலாளர் கிருஷ்ணகுமார், வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, நகரமைப்பு அலுவலர்கள் வாகினி, குமார், சுகாதார ஆய்வாளர்கள் சரத் பாபு, சரவணன், நகர்மன்ற துணைத் தலைவர் பழனிச்சாமி, நகர்மன்ற கொறடா சிவப்பிரகாசம் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
அப்துல் ரகுமான் (திமுக), ஆடு, மாடுகள் ரோடுகளில் திரிகிறது. எங்கள் பகுதியில் ஆடு, மாடு மந்தை போல் உள்ளது. இதனால் விபத்து ஏற்படுகிறது. நகராட்சி மூலம் உரிமையாளர்களுக்கு அபராதம் விதியுங்கள் என்றார். செந்தில்வேல்(திமுக), சொக்கலிங்கபுரம் நேதாஜி ரோட்டில் சூதாட்ட கிளப் அமைக்க நகராட்சி அனுமதி தரக்கூடாது. இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளோம் என்றார்.
மீனாட்சி (திமுக), விருதுநகர் மெயின் ரோட்டில் கட்டிட கழிவுகளை கொட்டி போக்குவரத்திற்கு இடையூறு செய்கின்றனர். நடவடிக்கை எடுங்கள் என்றார்.

தமிழ்காந்தன்(திமுக), நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் எப்போது அகற்றப்படும் என்றார். ஜெயகவிதா (திமுக), குப்பை வாங்க நகராட்சி தூய்மை பணியாளர்கள் சரிவர வருவதில்லை. சுகாதாரம் தான் முக்கியம். குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. தூய்மை பணியாளர்களை அதிகப்படுத்துங்கள் என்றார். அப்துல்ரகுமான்(திமுக), எங்கள் பகுதியில் 15 மாட்டு கறி கடைகள் உள்ளது. கழிவுகளை வாறுகால்களில் விடுகின்றனர். இதனால் கொசு தொல்லை அதிகம் உள்ளது. எனவே கறிக்கடைகளை அகற்றுங்கள். இல்லையென்றால் முறையாக கொசு மருந்து தெளியுங்கள். தூய்மை பணியாளர்களுக்கு முறையான உபகரணங்கள் வழங்குங்கள் என்றார்.

தமிழ்காந்தன்(திமுக), நாகலிங்கநகரில் முறையாக தெருக்களுக்கு பெயர் வைக்க வேண்டும். ஒரே பெயரில் இருப்பதால் குழப்பமாக உள்ளது என்றார். இதற்கு நகராட்சி கமிஷனர் ராஜமாணிக்கம், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும். மாடுகளை ரோடுகளில் திரியவிடும் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றார். இவ்வாறு விவாதம் நடந்தது. கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும்: கமிஷனர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article