பெரம்பூர்: சென்னை கிழக்கு மாவட்டம் திருவிக. நகர் தொகுதி இளைஞரணி சார்பில், இந்தி திணிப்பையும் நிதி பகிர்வில் பாரபட்சமும் மற்றும் தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் ஓட்டேரி மங்களபுரம் பகுதியில் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் மின்னல்ராஜ் தலைமை வகித்தார். இதில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, கோ.வி.செழியன், தாயகம் கவி எம்எல்ஏ, சென்னை மேயர் பிரியா கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் பேசியது; இந்தியை ஏற்றுக்கொண்டால்தான் கல்வி நிதியை தருவேன் என்று ஒன்றிய அரசு சொன்னது. ஆனால் 10000 கோடி கொடுத்தாலும் இந்தியை ஏற்றுக்கொள்ளமாட்டேன், அது தான் திமுகவின் கொள்கை என்று சொன்னவர் முதலமைச்சர்.
கல்விக்கு ஒன்றிய அரசு நிதி தராவிட்டாலும் தமிழகத்தின் நிதியிலேயே ஏழை,எளிய மாணவர்களின் கல்விக்கு திட்டங்களை அறிவித்திருக்கிறார் முதலமைச்சர். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு என்னதான் பாஜக ஆட்சியின் மைய புள்ளியாக நான் இருந்தாலும் மொழிக் கொள்கையில் என்னுடைய தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என குறிப்பிட்டுள்ளார். நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டுகிறது ஒன்றிய பாஜ அரசு. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாக கொடுத்தால் 29 பைசா மட்டுமே திருப்பி தருகிறது. ஆனால் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசத்திற்கு இரண்டு ரூபாய் வழங்குகிறது. 75 ஆண்டு வரலாறு கொண்டவர்கள் திமுகவினர். ஆனால் நேற்று வந்தவர்கள் எல்லாம் முதலமைச்சர் ஆகுவேன் என்று சொல்கிறார்கள். நேற்று கட்சி தொடங்கியவர் எல்லாம் இன்று முதலமைச்சராகுவேன் என்பதெல்லாம் ஒரு கனவு மட்டுமே.
திமுக எதிரி என்று சொல்ல கூட தவெகவுக்கு தகுதி வேண்டும். என்ன செய்து விட்டாய், அப்படி திமுகவை எதிரி என்று கூற? 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம். பெரியாரின் கொள்கையில் உள்ள தமிழகத்தில் பாசிச பாஜக நுழைய முடியாது. 2026 ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியாது. இவ்வாறு பேசினார்.
The post விஜய் மக்களுக்கு என்ன செய்துவிட்டார்? திமுகவை எதிரி என சொல்லக்கூட தவெகவுக்கு எந்த தகுதியும் இல்லை: அமைச்சர் கோ.வி.செழியன் பேச்சு appeared first on Dinakaran.