திருப்பூர்: திருப்பூரில் நேற்று 15 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. இதில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென மாவட்டம் மற்றும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு பகுதியில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, பெத்திசெட்டிபுரம், அறிவொளி நகர், பாண்டியன்நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.
கொங்கு மெயின் ரோடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோன் வைண்டிங் நிறுவனத்திற்குள் மழை நீர் புகுந்தது. வைண்டிங் எந்திரங்கள் மற்றும் நூல் கோன்கள் நீரில் முழ்கின. ஊத்துக்குளி அருகே காகித்தமலையில் இருந்து காங்கேயம்பாளையம் செல்லும் வழியில் உள்ள அவரக்கரை தரைப்பாலம் வெள்ளநீரால் அடித்து செல்லப்பட்டது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி திருப்பூர் குமார் நகரில் 15 செ.மீ., வடக்கு பகுதியில் 11 செ.மீ, திருப்பூர் தெற்கு பகுதியில் 9 செ.மீ, பல்லடம் ரோட்டில் 13 செ.மீ, ஊத்துக்குளியில் 12 செ.மீ, மழை பதிவானது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை பல்வேறு இடங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கோபி அருகே உள்ள சிறுவலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சிறுவலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வெளியேறிய மழை நீர் ஓடைகள் வழியாக வெளியேறியது. இதனால் மழை நீர் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நாகதேவன்பாளையம் அருகே உள்ள வெள்ளியங்காட்டு புதூரில் 10 வீடுகளை சூழ்ந்தது.
வெள்ளியங்காட்டு புதூர் – நாகதேவன்பாளையம் சாலையில் சுமார் 2 அடி உயரத்திற்கு சென்றது. இதனால் இரு கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடிவேரி அணை பகுதியில் பவானி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அதிகாரிகள் தடை விதித்தனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக கோபியில் 15 செ.மீ. மழை பதிவானது. இதேபோல கோவை உள்பட தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்தது.
The post திருப்பூரில் 15 செ.மீ மழை கொட்டியது: வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது appeared first on Dinakaran.