காவல் நிலைய விசாரணையில் தொழிலாளி அடித்துக்கொலை ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி உள்பட 9 போலீசாருக்கு ஆயுள் தண்டனை: 25 ஆண்டுகளுக்கு பின் தூத்துக்குடி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

18 hours ago 3

தூத்துக்குடி: தூத்துக்குடியில் காவல் நிலைய விசாரணையில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உள்பட 9 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.  தூத்துக்குடி அலங்காரத்தட்டை சேர்ந்தவர் வின்சென்ட். உப்பளத் ெதாழிலாளியான இவர், 1999ல் தூத்துக்குடி ரூரல் பஞ்சாயத்து உறுப்பினராகவும், அலங்காரத்தட்டு ஊர்த் தலைவராகவும் இருந்து வந்தார்.

இவருக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவியும், 5 மகன்களும் உள்ளனர். கடந்த 17-9-1999 அன்று இரவு இங்குள்ள விநாயகர் கோயில் திருவிழாவிற்கு வின்சென்ட், அவரது நண்பரான முத்து என்பவருடன் சென்றுள்ளார். இருவரும் வீடு திரும்பவில்லை. இதனிடையே கணவரான வின்சென்டை தாளமுத்துநகர் போலீசார் அழைத்துச் சென்றதாக கிடைத்த தகவலையடுத்து கிருஷ்ணம்மாள் அங்கு சென்றபோது கணவரை பார்க்க அனுமதிக்கவில்லை. 18-9-1999 அன்று இரவு வின்சென்டை தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் தாக்கியதில் இறந்து விட்டதாக கிருஷ்ணம்மாளுக்கு தகவல் கிடைத்தது.

அவரது புகாரின் பேரில் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதில் வின்சென்ட், முத்து மற்றும் இதே பகுதியை சேர்ந்த மரியதாஸ் ஆகிய 3 பேரையும் வெடிபொருட்கள் வைத்திருந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு அப்போதைய தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையிலான போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பணியில் இருந்த போலீசார், 3 பேரையும் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில் வின்சென்ட் காவல் நிலையத்திலேயே இறந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அப்போதைய இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் ஜெயசேகரன், ஜோசப்ராஜ், பிச்சையா, செல்லத்துரை, வீரபாகு, சிவசுப்பிரமணியன், சுப்பையா, ரத்தினசாமி, பாலசுப்பிரமணி, எஸ்ஐ ராமகிருஷ்ணன் ஆகிய 11 பேர் மீது அடைத்து வைத்து தாக்குதல், கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட நீதிமன்றங்களில் நடந்து வந்தது.

கடந்த 2024 ஜூலை மாதம் தூத்துக்குடி 1வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. வழக்கை நீதிபதி தாண்டவன் விசாரித்து, கடந்த மார்ச் 20ம் தேதியன்று ‘ஏப்ரல் 5ம் தேதி (நேற்று) தீர்ப்பு வழங்கப்படும்’ என அறிவித்தார். இதைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட 11 பேரும் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் சம்பந்தப்பட்ட போலீசார் பலர் ஓய்வுபெற்று விட்டனர்.

இவ்வழக்கில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், முன்னாள் எஸ்ஐ ஜெயசேகரன், முன்னாள் எஸ்எஸ்ஐ ஜோசப்ராஜ், எஸ்எஸ்ஐ பிச்சையா, முன்னாள் எஸ்எஸ்ஐ வீரபாகு, முன்னாள் ஏட்டுகள் செல்லத்துரை, சுப்பையா, பாலசுப்பிரமணி, அப்போதைய எஸ்ஐயும், தற்போதைய ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பியுமான ராமகிருஷ்ணன் ஆகிய 9 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தாண்டவன் தீர்ப்பு கூறினார். எஸ்எஸ்ஐ சிவசுப்பிரமணியன், ஏட்டு ரத்தினசாமி ஆகியோரை விடுதலை செய்தார். தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரும் நேற்றிரவே பலத்த பாதுகாப்புடன் பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 25 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்பட்ட இந்த ஆயுள் தண்டனை தீர்ப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post காவல் நிலைய விசாரணையில் தொழிலாளி அடித்துக்கொலை ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி உள்பட 9 போலீசாருக்கு ஆயுள் தண்டனை: 25 ஆண்டுகளுக்கு பின் தூத்துக்குடி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article