வாழ்த்துகிறது தமிழ்நிலம்

3 weeks ago 4

தமிழ்நாட்டில் கடந்த 2007ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கியது. மாநில அரசும், அப்போதைய ஒன்றிய அரசும் இணைந்து ரூ.22,150 கோடி மதிப்பீட்டில் இத்திட்டத்தை நிறைவேற்றியது. 54.1 கிலோ மீட்டர் நீளத்திற்கு 2 வழித்தடங்களில் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் நாள் தோறும் 3.10 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இதையடுத்து ரூ.63,246 கோடியில் 119 கிலோ மீட்டர் நீளமுள்ள மேலும் 3 வழித்தடங்களை கொண்ட இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் 2020ல் தொடங்கப்பட்டது.

ஆனால் 3 ஆண்டுகள் முடிந்த பின்னும், அடுத்த கட்டப்பணிகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை குழு ஒப்புதல் அளிக்கவில்லை. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ரூ.63,246 கோடியில் 5 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதனால் ஒரு கட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் அறவே முடங்கியது. இதற்குரிய நிதியை ஒன்றிய அரசிடம் இருந்து பெறுவதற்காக இதுவரை 8 முறைக்கு மேல் கடிதம் எழுதியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். பிரதமரை சந்திக்கும் நிகழ்வுகளிலும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை ஒதுக்கித்தர வேண்டும் என்பதே அவரது பிரதான கோரிக்கையாக இருந்தது.

திட்டமதிப்பில் 70 சதவீதத்தை பன்னாட்டு வளர்ச்சி வங்கிகளிடம் கடனாக பெறலாம். மீதமுள்ள 30 சதவீதத்தை ஒன்றிய, மாநில அரசுகள் தலா 15 சதவீதம் என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளலாம். அதன்படி சென்னை மாநகரின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசிடமிருந்து குறைந்த நிதியைத்தான் கேட்கிறோம் என்றும் தெளிவான விளக்கம் அளித்தார் முதல்வர். இதன் எதிரொலியாக மெட்ரோ இரண்டாம் கட்டத்திற்கான நிதியை தற்போது முழுமையாக ஒதுக்கியுள்ளது ஒன்றிய அரசு. அதனால் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற முதல்வர், ‘‘மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல்கட்டம் செயல்படுத்தப்பட்ட அதே முறையில் இரண்டாவது கட்டப்பணிகளும் செயல்படுத்தப் படவேண்டும் என்று நான் பலமுறை வலியுறுத்தினேன். இதனை ஏற்று அதற்கான ஒப்புதலை அண்மையில் அளித்துள்ளார் பிரதமர். அவருக்கும் ஒன்றிய அரசுக்கும் முதற்கண் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் பிரதமர் நிதி ஒதுக்கவேண்டும், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்டத்திற்கான பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன்,’’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, மாநிலத்தின் இதயமாகவும் திகழ்கிறது. பலகோடி மக்களை வாழவைக்கும் சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் என்பது ஒரு காலத்தில் பெரும்சவாலாக இருந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2016ம் ஆண்டு மெட்ரோ ரயில் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்தது. அதேநேரத்தில் பெருகிவரும் வளர்ச்சி, மக்கள் நெருக்கம், கட்டமைப்பு வசதிகளை கருத்தில் கொண்டு இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டமும் விரைவில் செயல்வடிவம் பெறப்போகிறது. கடிதம், கோரிக்கை என்று மக்களின் குரலாய் ஒலித்த முதல்வர் நிதி ஒதுக்கிய ஒன்றிய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஆனால் முதல்வரின் சீரிய முயற்சியை பாராட்டி அவருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்துகிறது தமிழ்நிலம் என்பதே நிதர்சனம்.

The post வாழ்த்துகிறது தமிழ்நிலம் appeared first on Dinakaran.

Read Entire Article