
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே உள்ள பச்சைமலை எஸ்டேட் வடக்கு பிரிவில், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோன் முண்டா - மோனிகா தேவி தம்பதியினர் தனது 2 குழந்தைகளுடன் தங்கியிருந்து தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
கடந்த 20 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் மோனிகாதேவி வீட்டின் பின்புறம் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அவரது மூத்த மகள் ரோஷினி குமாரி(4) உடனிருந்தார். மோனிகாகுமாரி தண்ணீர் குடத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றார். சிறுமி ரோஷினி குமாரி குடிநீர் குழாய் அருகே இருந்தார். அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பதறியபடி மோனிகாதேவி ஓடி வந்தார். அப்போது, தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று சிறுமியின் கழுத்தில் கடித்து இழுத்து செல்வதை கண்டு அதிர்ச்சியில் கதறி அழுதார்.
சிறுமியில் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர் ஓடி வருவதற்குள், வனப்பகுதிக்குள் சிறுமியை இழுத்து சென்றது. சிறுத்தை துாக்கிச்சென்ற சிறுமியை, 14 மணி நேரத்திற்கு பின் வனத்துறையினர் சடலமாக மீட்டனர். சிறுமியை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் எஸ்டேட் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து, சிசிடிவி கேமரா வாயிலாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது. சிறுத்தையை ஆழ்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிறுமியை கொன்ற சிறுத்தை 3 நாட்களுக்கு பிறகு வனத்துறை கூண்டில் சிக்கியதால், எஸ்டேட் தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.