வான்வழியை பயன்படுத்த தடை விதித்ததால் தினமும் ரூ.6.5 கோடியை இழக்கும் பாகிஸ்தான்: சர்வதேச விமானங்களுக்கும் பாதிப்பு

2 weeks ago 4

கராச்சி: தங்களது வான்வழியை பயன்படுத்த தடை விதித்ததால் தினமும் ரூ.6.5 கோடியை பாகிஸ்தான் இழந்து வரும் நிலையில், சர்வதேச விமானங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையான முடிவுகளை எடுத்ததால், தன் நாட்டின் வான்வழியை இந்தியா பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்தது. அதனால் தற்போது நாள் ஒன்றுக்கு 6.5 கோடி ரூபாய் வரை இழப்பை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா எடுத்த கடுமையான முடிவுகளுக்குப் பதிலடியாக, வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்ததால் அதன் பலனை பாகிஸ்தான் தற்போது அனுபவிக்க தொடங்கியுள்ளது.

பாகிஸ்தான் எடுத்த முடிவுகள் அவர்களுக்கே பெரிய இழப்பாகி விட்டது. பாகிஸ்தானின் வான்வழியை பயன்படுத்தும் இந்திய விமானங்களிடமிருந்து ஒவ்வொரு விமானத்திற்கும் சுமார் 50,000 ரூபாய் வரை ‘ஓவர் ஃபிளைட்’ கட்டணமாக பெறப்பட்டுவந்தது. பெரிய விமானங்களுக்கு இந்த தொகை மேலும் அதிகமாக இருக்கும். இந்திய விமானங்கள் மூலம் தினமும் பாகிஸ்தான் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் பெற்றுவந்தது. இந்திய விமானங்கள் தவிர்த்து பிற உலகளாவிய விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த தடையால், பாகிஸ்தானுக்கு மற்றொரு 3.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. ஆக மொத்தம் தினசரி 6.5 கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வருகிறது. பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த முடியாததால், இந்தியாவிலிருந்து அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய ஆசியா, வளைகுடா நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் அதிக பாதிப்பை சந்திக்கின்றன. அதேபோல் ஏர்இந்தியா, இண்டிகோ போன்ற இந்திய விமான நிறுவனங்கள், அதிக தூரம் சென்று குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முந்தைய 2019ல் நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாலகோட் விமானத் தாக்குதல் நடத்தியபோது, இதேபோல பாகிஸ்தான் வான்வழி முடக்கியது. அப்போது பாகிஸ்தானுக்கு 85 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post வான்வழியை பயன்படுத்த தடை விதித்ததால் தினமும் ரூ.6.5 கோடியை இழக்கும் பாகிஸ்தான்: சர்வதேச விமானங்களுக்கும் பாதிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article