‘காவல் துறையில் பெண்கள்’ 11வது தேசிய மாநாடு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு; 18 தீர்மானங்கள் நிறைவேற்றம்

3 hours ago 3

சென்னை: சென்னை வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் ‘காவல்துறையில் பெண்கள்’ 11வது தேசிய மாநாடு நடந்தது. இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். பெண் காவலர் நலன், பணி முறைகள், அதிகார பகிர்வு சார்ந்து 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தேசிய காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கடந்த 2002ம் ஆண்டு முதல் ‘காவல் துறையில் பெண்கள்’ என்ற தலைப்பில், தேசிய அளவிலான மாநாடு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்நிலையில், 11வது மாநாடு, வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நேற்று முன்தினம் துவங்கியது.

மாநாட்டில், தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து பெண் காவல்துறை உயர் அதிகாரிகள், ஒன்றிய அரசு பிரதிநிதிகள் என 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், காவல்துறையில் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள், பிரச்னைகள் மற்றும் அவர்களது கோரிக்கைகள், தேவைகள் உள்ளிட்டவைகள் குறித்து பல்வேறு விவாதங்கள், கருத்து பரிமாற்றங்கள் நடந்தன.

இறுதியாக, காவல் துறையில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு, ஆண், பெண் அதிகாரிகளுக்கு சாத்தியமான முறையில் ஒரே நேரத்தில் பயிற்சி அளித்தல், அதிக எண்ணிக்கையில் பெண் கவாத்து பயிற்சியாளர்களை நியமித்தல் உள்பட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மாநாடு நிறைவு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, விழா சிறப்பு மலரை வெளியிட்டார்.

அவர் பேசுகையில், ‘‘தமிழக காவல்துறையில், பெண்கள் நியமிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, கடந்த 2023ல் விழா முன்னெடுக்கப்பட்டது. அதில், பெண் காவலர்களுக்கு காலை ‘ரோல்கால்’ நேரத்தை தளர்த்துவது, தனி ஓய்வறைகள், தங்கும் வசதி, குழந்தை பராமரிப்பு மையம், இடமாற்றம், விடுப்பு மற்றும் பணிநியமனக் கொள்கை என 9 திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. தமிழகத்தில், சட்டம்- ஒழுங்கு, குற்றப் பிரிவு, போக்குவரத்து காவல் நிலையங்களில் 43 சதவீதம் பெண் காவல் அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். இது மற்ற மாநிலங்களைவிட அதிகம்’’ என்றார்.

முன்னதாக. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டி.ஜி.பி சீமா அகர்வால் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சங்கர்ஜிவால் நன்றி கூறினார்.

The post ‘காவல் துறையில் பெண்கள்’ 11வது தேசிய மாநாடு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு; 18 தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article