வங்கக் கடலில் காற்று சுழற்சி; 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

2 hours ago 3

சென்னை: தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அத்துடன் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கணித்தபடி இன்று (16ம் தேதி) மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்யத் தொடங்கி, பரவலாக அது தமிழகம் முழுவதும் பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்பது உறுதியான நிலையில், டெல்டாவின் தெற்குப் பகுதியிலும், வேதாரண்யம் பகுதியில் தொடங்கி கோடியக்கரை வரையிலும் கனமழை பெய்யும். குறிப்பாக கடலோர மாவட்டங்களில் இன்று நல்ல மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மே மாத இறுதியில் பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்து மே மாத வெப்பத்தை தணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகக் கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும், தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும். 17ம் தேதியில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 18ம் தேதி 11 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். அதே நிலை 21ம் தேதி வரையும் நீடிக்கும்.

வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லை
வெப்பநிலையை பொருத்தவரையில் தஞ்சாவூர், ஈரோடு, மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் திருச்சி மாவட்டங்களில் நேற்று இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஈரோடு, பரங்கிப்பேட்டை 104 டிகிரி, மதுரை விமான நிலையம், பாளையங்கோட்டை 103 டிகிரி, திருத்தணி, தஞ்சாவூர், வேலூர் 102 டிகிரி, திருச்சி, சென்னை, சேலம், கடலூர், கரூர் 100 டிகிரி, வெயில் நிலவியது. மேலும், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக பெரிய மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவாக இருக்கிறது. எனினும் ஒருசில இடங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் குறையவும் வாய்ப்புள்ளது.

The post வங்கக் கடலில் காற்று சுழற்சி; 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article