சென்னை
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்று (1.11.2024) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் 10 மாவட்டங்களில் கனமழை
நாளை மறுநாள் (நவ., 3-ம் தேதி) குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவ., 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்க வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் இப்பகுதிகளுக்கு இன்று மற்றும் நாளை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.