பிரபஞ்சத்தின் சக்தி அளப்பரியது. பால் வீதிகள், நட்சத்திர மண்டலங்கள், அதில் உள்ள நட்சத்திரங்கள், அந்த நட்சத்திரங்களைச் சுற்றி வருகின்ற கோள்கள் என்ன, பல பொருள்கள் விண்ணில் மிதக்கின்றன. அண்ட சராசரம் என்ற சொல் நம்முடைய ஆன்மிக இலக்கியத்தில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. அண்டம் என்பது மிகப் பிரமாண்டமான வான்வெளி என்று வைத்துக்கொள்ளலாம். சரம் என்பது அசைவது. அசரம் என்பது அசையாதது. இந்த அண்டத்தில் அசையாத பொருள்களும் அசைகின்ற பொருள்களும் இருக்கின்றன. ஒளி வீசும் பொருள்களும் ஒளி வாங்கும் பொருள்களும் இருக்கின்றன. உதாரணமாக, நட்சத்திரங்கள் ஒளி வீசுகின்றன. அந்த நட்சத்திரங்களின் ஒளியை வாங்கி கிரகங்கள் பிரதிபலிக்கின்றன.
சூரியன் சுய ஒளி வீசும் நட்சத்திரம். சந்திரன், பூமி ஒளி வாங்கி பிரதிபலிக்கும் கிரகங்கள். இவைகளுக்கெல்லாம் ஒரு விதமான ஈர்ப்பு சக்தி இருக்கிறது. இந்த ஈர்ப்பு சக்தியின் அமைப்பால், ஒரு ஒழுங்கு முறையில் இயக்கங்கள் இருப்பதாகத் தெரிந்தாலும், அவ்வப்பொழுது சிற்சில மாறுபாடுகளால் சில விபரீதங்களும் ஏற்படுகின்றன. இந்த விண்வெளிப் பொருள்களின் (celestial bodies) அசைவையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் இணைத்து, கணக்கிட்டு, அனுமானித்து, ஊகித்து அறியும் கலையாக ஜோதிட சாஸ்திரம் விளங்குகின்றது. இந்த ஜோதிட சாஸ்திரத்தை நம்மிடையே புழங்கும் புராணக் கதைகளோடும் ஆன்மிகத்தோடும் இணைத்துப் பார்க்கும் பொழுது, நமக்கு வியக்கத்தக்க சில உண்மைகள் புரியும்.உதாரணமாக, அசுர சக்தி (devil power), தெய்வசக்தி (divine power) என்று சொல்லுகின்றோம். புராணங்களில், அசுரசக்தி தலையெடுக்கின்ற பொழுது உலகம் துன்பப்படுவதும், தெய்வசக்தி தலையெடுத்து அசுர சக்தியை கட்டுப்படுத்துகின்ற பொழுது மறுபடியும் உலகம் நிம்மதி அடைவதும் மகிழ்ச்சி அடைவதும் என புராணங்களில் இருக்கிறது.
இதை ஜோதிட சாஸ்திரத்தில் நாம் எப்படித் தெரிந்துகொள்ளலாம்? சுபர்கள் அசுபர்கள் என்று கிரகங்களைப் பிரித்திருக்கிறார்கள். உதாரணமாக சனி, ராகு – கேது, செவ்வாய், சூரியன் முதலிய கோள்களை பாவகிரகங்களாகவும், குரு, சுக்கிரன் சுபர்களோடு சேர்ந்த புதன் மற்றும் சந்திரனை சுபர்களாகவும் ஜோதிட சாஸ்திரம் கருதுகிறது. இவைகள் எல்லாம் ஒருவிதமான குறியீடுகளே. சில நேரங்களில் பாவர்கள் என்று சொல்லப்படுகின்ற கிரகங்களின், கூட்டு ஒரு இடத்திலே இணைகின்ற பொழுது உலகில் பல விபரீதங்கள் நடக்கின்றன. அந்த விபரீதங்கள் உலகப் போராக இருக்கலாம், சுனாமி போன்ற சீற்றங்களாக இருக்கலாம், பெரும் புயலாக இருக்கலாம், பூகம்பங்களாக இருக்கலாம், விபத்துக்களாக இருக்கலாம், தீ விபத்து, வெடி விபத்து போன்றவைகளோ பெருவெள்ளமோ மக்கள் ஒரே இடத்தில்கூடி ஆபத்தில் உயிர் இழத்தல் போன்ற விபரீதங்களோ என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
அப்பொழுதெல்லாம் ஏதோ ஒரு விதத்தில் இந்த பாப கிரக நிலைகள் ஒன்றிணைவதும், அது சில காலம் நீடிப்பதால் ஆபத்து நீடிப்பதையும் காணலாம். பிறகு, குரு பார்வை முதலிய சுப கிரகங்களின் சக்தி ஓங்கி, பாபர்களின் கூட்டைக் கட்டுப்படுத்தும் பொழுது இந்த விபரீதங்கள் தணிவதையும் நாம் உணரமுடியும்.ஒரு காலத்தில் ஜோதிட சாஸ்திரம் தனி மனிதர்களுக்காக இருந்ததில்லை. அது அரசர்களுக்கான சாஸ்திரமாக இருந்தது. அரசன் அந்த நாட்டை ஆள்பவன். எனவே அவனுடைய வெற்றியும் தோல்வியும் அந்த நாட்டு மக்களின் வெற்றி தோல்வியாகப் பார்க்கப்பட்ட காலத்தில், வான்கோள் நிலைகளைக் கணித்து, அந்த நாட்டுக்கு வரக்கூடிய இன்பங்கள், துன்பங்கள், பஞ்சங்கள், போர் நெருக்கடிகள், அரசனுக்கு ஏற்படக்கூடிய உயிராபத்துக்கள் போன்றவற்றைக் கணித்து சொல்லக் கூடியவர்கள் இருந்தார்கள். இது தவிர, காட்டில் தவம் செய்கின்ற மகரிஷிகள், தங்களுடைய ஞான சக்தியால், இந்த நிலைகளை உணர்ந்து, தேவைப்பட்டால் அதனை அரசனுக்குத் தெரிவிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.
பொதுவாக உலகத்துக்கும், உலகத்தில் உள்ள குறிப்பிட்ட நாட்டுக்கும் ஜோதிடம் கணிக்கும் முறை, வெகு காலமாகவே இருந்தது. இப்பொழுது அதனை உலகியல் ஜோதிடம் (முண்டேன் அஸ்ட்ராலஜி) என்று சொல்கின்றார்கள். பஞ்சாங்கங்களில் அவ்வப்பொழுது, நாட்டின் வடமேற்கில் பஞ்சம் ஏற்படும், கிழக்கில் வெள்ளப் பெருக்கு ஏற்படும், சில குறிப்பிட்ட பகுதிகளில் தீ விபத்து ஏற்படும், என்றெல்லாம் குறிக்கப்பட்டு இருப்பதைக் காணலாம். சில நேரங்களில் அவை நடக்கும் சில நேரங்களிலே நடக்காமலும் இருக்கும். கிரக அசைவுகளைத் துல்லியமாக கணிதத்தால் பல நேரங்களில் நடந்து விடுகிறது. நாள் கணக்கில் கொஞ்சம் முன்பின் மாறினாலும் ஏதோ ஒரு விதத்தில் அந்த நிகழ்ச்சி நடந்து விடுகிறது. சில நேரங்களில் நடக்கவில்லை என்று சொன்னால், அதற்கு கணிப்பு தவறல்ல.
விஞ்ஞான முறைப்படி எப்படி சில நேரங்களில் மழை புயலை கணித்தாலும், தவறிவிடுவது போல இந்த கணக்கு களும் திடீர் போக்கு மாற்றங்களால் தவறி விடுவதும் உண்டு. எனவே இதை எச்சரிக்கை குறிப்பாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ராசிகளில் காற்று ராசி, நீர் ராசி, நெருப்பு ராசி, நில ராசி என்று பிரித்து வைத்திருக்கிறார்கள். உதாரணமாக, மேஷ ராசி – நெருப்பு ராசி, கடக ராசி – நீர் ராசி, ரிஷப ராசி – நில ராசி. இவைகள் போலவே கிரகங்களிலும் காற்றுக் கிரகங்கள், நெருப்புக் கிரகங்கள், நீர் கிரகங்கள் என்று இருக்கின்றன. உதாரணமாக, சந்திரன் சுக்கிரன் நீர்க் கிரகங்கள். புதன் காற்றுக் கிரகம். சூரியன் செவ்வாய் நெருப்புக் கிரகங்கள். இந்த கிரகங்கள் ஒன்றை ஒன்று தொடர்பு கொள்ளும் பொழுது அதற்கு ஏற்ப பூமியின் பகுதிகளில் ஏதேனும் ஒரு நன்மையோ தீமையோ நடக்கிறது.
உதாரணமாக, செவ்வாய் சூரியன் போன்ற நெருப்புக் கிரகங்கள் சந்திக்கின்ற பொழுது சில விபத்துக்கள் நேர்கின்றன. அதோடு சனியும் ராகுவும் இணைகின்ற பொழுது அந்த விபத்துக்கள் மோசமான விளைவுகளைத் தருகின்றன. ஒரு குறிப்பிட்ட ராசியில் கிரக யுத்தம் அதாவது எல்லா கிரகங்களும் மிக நெருக்கமாக இருக்கின்ற பொழுது உலகில் சில விபரீதங்கள் நடக்கின்றன. உதாரணமாக, இந்த மாத அமாவாசையில் பல கிரகங்கள் மீன ராசியில் ஒன்றாக இணைந்து கிரக யுத்தம் நடைபெற்றது. அந்த அமாவாசையை ஒட்டித்தான் (28.3.2025) மியான்மர், தாய்லாந்து போன்ற இடங்களில் பூகம்பம் ஏற்பட்டது. சனி, சந்திரன், சூரியன், செவ்வாய் இவர்களின் இணைவு பயங்கர ஆபத்துக்களைத் தருகிறது.
அதிலும் சனி செவ்வாய் மிகப் பெரிய உயிர் ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது. ஒரு சின்ன உதாரணம்; நம்முடைய நாட்டில் குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டது. ஜனவரி மாதம் 26 ஆம் தேதி, 2004ல் சுனாமி ஏற்பட்டது. டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி, இந்த 26 ஆம் தேதி என்பது எட்டு என்கிற எண்ணைக் குறிக்கிறது. எட்டு என்பது சனிக்குரிய எண் அல்லவா. நாம் அன்றைய கிரகநிலையை கணித்துப் பார்க்கும் பொழுது, அசுரசக்திகளின் கூட்டு என்பது போல, இயற்கை பாபர்களின் ஒன்றிணைவு இருப்பதைக் காணலாம்.
The post வானியல் சொல்லும் உலகியல் ஜோதிடம் appeared first on Dinakaran.