சென்னை,
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்ற மக்கள், மீண்டும் சென்னைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். இதனால் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாம்பரம், வண்டலூர் பகுதிகளில் நத்தை போல வாகனங்கள் ஊர்ந்து சென்றன. போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனங்களும் சிக்கித் தவித்தன.
இந்நிலையில் பொங்கல் முடிந்து சென்னை திரும்புவோரின் வாகன நெரிசலை குறைக்க 3 நாட்களுக்கு காவல்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதன்படி திருப்போரூர் வழியாக சென்னைக்குள் நுழையும் கனரக வாகனங்கள் செங்கல்பட்டு வழியாக பயணிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
கனரக வாகனங்கள் இல்லா சாதாரண வாகனங்கள் ஒரகடம் சந்திப்பில் இருந்து திரும்பி ஸ்ரீபெரும்புதூர் வழியாக செல்லமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. வெளியூரில் இருந்து சென்னை வரும் கனரக வாகனங்கள் பரனூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கனரக வாகனங்கள் ஜிஎஸ்டி, ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் செல்ல இன்று பகல் 2 மணி முதல் ஜன.20 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம் புதிய பாலத்தில் இன்று பகல் 2 மணி முதல் திங்கட்கிழமை பகல் 12 மணி வரை சென்னை நோக்கி ஒருவழி போக்குவரத்தாக தேவைக்கு ஏற்ப மாற்றப்படுகிறது. ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்தை விரைவுபடுத்த ஆம்னி பஸ்கள் வெளிவட்ட சாலை வழியாக திருப்பி அனுப்பப்படுகிறது. சிரமம் இன்றி மக்கள் சென்னைக்கு திரும்ப ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தாம்பரம் போக்குவரத்துப் பிரிவு காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.