20-25 நிமிடங்களில் மரணத்தில் இருந்து நாங்கள் உயிர் தப்பினோம்: ஷேக் ஹசீனா பகீர் தகவல்

2 hours ago 3

டாக்கா,

வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில், வங்காளதேச விடுதலை போரில் ஈடுபட்டவர்களின் உறவினர்களுக்கு, அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் கடந்த ஆண்டு ஜூலையில் வன்முறையாக வெடித்தது.

இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு முடிவு ஏற்படுத்த வலியுறுத்தி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், போராட்டத்திற்கு ஒரு மாதத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.

இதனால், நாட்டில் பதற்ற நிலை ஏற்பட்டது. தீவிர போராட்டம் தொடர்ச்சியாக பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.

வங்காளதேசத்தின் டாக்கா நகரில் இருந்து, சகோதரியுடன் ராணுவ விமானத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா புறப்பட்டார். இந்தியாவில் அவர் தஞ்சமடைந்துள்ளார். அவரை வங்காளதேசத்திடம் திரும்ப ஒப்படைக்கும்படி அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்து உள்ளது.

இந்நிலையில், ஹசீனா பேசிய ஆடியோ உரை ஒன்று, வங்காளதேச அவாமி லீக் கட்சியின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், அவருடைய இளைய சகோதரி ஷேக் ரெஹானா மற்றும் ஹசீனா இருவரும் 20 முதல் 25 நிமிடங்களில் மரணம் நேரிடுவதில் இருந்து தப்பிய விவரங்களை கூறியுள்ளார். கடந்த காலங்களில் பல்வேறு முறை அவரை கொல்ல சதி திட்டங்கள் தீட்டப்பட்டன என்றும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

அந்த பதிவில், ஆகஸ்டு 21-ந்தேதி படுகொலையில் இருந்து தப்பினேன் என்றே நான் உணர்கிறேன். கொதலிபாராவில் நடந்த பெரிய வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பினேன். 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதியும் படுகொலையில் இருந்து உயிர் தப்பியுள்ளேன். அல்லாவின் கருணையும், கரமும் நிச்சயம் உள்ளது என தெரிவித்து உள்ளார். அப்படி இல்லையெனில், இந்த முறை நான் உயிர் பிழைத்து இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

அவர்கள் என்னை கொல்ல எப்படி திட்டமிட்டனர் என்பது உங்களுக்கே பின்னர் தெரிந்திருக்கும். ஆனால், நான் ஏதேனும் செய்ய வேண்டும் என அல்லா விரும்புகிறார். அதனாலேயே நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன். எனினும், நான் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறேன். எனக்கு, என்னுடைய நாடு இல்லாமல், வீடு இல்லாமல்... அனைத்தும் எரிந்து போய் விட்டது என உணர்ச்சிவசப்பட்டு வேதனையை வெளிப்படுத்தும் குரலில் பேசியிருக்கிறார்.

2004-ம் ஆண்டு பயங்கரவாத ஒழிப்பு பேரணியின்போது, நடந்த எறிகுண்டு தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 20 ஆயிரம் பேர் கூடியிருந்த அந்த கூட்டத்தில், அப்போதுதான் ஹசீனா உரையாற்றி முடித்திருந்தபோது, அந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஹசீனாவுக்கும் காயங்கள் ஏற்பட்டன.

இதேபோன்று, 2000-ம் ஆண்டு ஜூலையில் அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் ஹசீனா உரையாற்ற இருந்த நிலையில், 40 கிலோ வெடிகுண்டு ஒன்று கொதலிபாராவில் உள்ள கல்லூரி ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்டது.

Read Entire Article