டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட், ரோகித்தின் எதிர்காலம் குறித்து இந்திய முன்னாள் வீரர் கருத்து

2 hours ago 3

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை 27 ஆண்டுக்கு பிறகு தாரைவார்த்தது. அதன் தொடர்ச்சியாக சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் மோசமாக தோற்றது. அத்துடன் ஆஸ்திரேலியாவில் நடந்த அந்த நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 1-3 என்ற கணக்கில் தோற்று 10 ஆண்டுக்கு பிறகு பார்டர்- கவாஸ்கர் கோப்பையை இழந்தது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பும் பறிபோனது.

இந்த தொடர்களில் இந்திய அணியின் செயல்பாட்டை புரட்டிப்பார்த்தால் பேட்ஸ்மேன்களின் சொதப்பலே தோல்விக்கு முக்கியம் காரணம் என்பது புரியும். குறிப்பாக மூத்த வீரர்கள் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா ரன் எடுக்க முடியாமல் திண்டாடியது பலத்த விமர்சனத்திற்குள்ளானது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விராட் கோலி, ஆப்ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை அடிக்க முயற்சித்து 8 முறை பின்பகுதியில் கேட்ச் ஆனார். இதன் காரணமாக இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா ஓய்வு பெறுவது அவருடைய கையில் இருப்பதாக இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். ஆனால் அவருடைய கெரியரை அஜித் அகர்கர் நிர்ணயிக்கும் நிலையில் இருப்பதாகவும் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

மறுபுறம் விராட் கோலி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்டில் அசத்துவதற்கு புஜாரா போல கவுண்டி தொடரில் விளையாடுவது அவசியம் என்றும் மஞ்ரேக்கர் அறிவுறுத்தியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "இந்திய கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய வருங்காலத்தை தீர்மானித்தார். அதே போல ரோகித் சர்மா தனது வருங்காலத்தை தீர்மானிப்பார் என்று நம்புகிறேன். தேர்வு என்பது அவருடைய சொந்த முடிவு. எவ்வளவு காலம் விளையாட முடியும் அல்லது ஒரு வீரராக எவ்வளவு பங்காற்ற முடியும் என்பது உங்களை பொறுத்தது. அதே சமயம் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் அதை தீர்மானிக்கலாம்.

ஆனால் விராட் கோலி நிறைய உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் முதல் டெஸ்ட் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. கவுண்டி தொடர் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. எனவே அவர் புஜாரா போல ஏதேனும் ஒரு கவுண்டி அணியில் இணைந்து பயிற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் நல்ல அறிகுறிகள் தென்பட்டால் விராட் கோலி தொடர்ந்து விளையாடலாம். இல்லையென்றால் விராட் கோலி மீண்டும் தடுமாறுவதையே நாம் பார்க்க முடியும். அது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. எனவே கவுண்டி தொடரில் விளையாடுவதே விராட் கோலியை பொறுத்த வரை நல்ல திட்டமாக இருக்கும்" என்று கூறினார்.

Read Entire Article