திருவண்ணாமலை, பிப்.14: அவசர காலங்களில் தகவல் தெரிவிக்க வசதியாக, வாகன உரிமையாளர்கள் இணையதளத்தில் செல்போன் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்திருப்பதாவது: அவசர காலங்களில் தகவல் தெரிவிக்கவும், சம்மந்தப்பட்ட வாகனம் விதி மீறல்கள் ஈடுபட்டால் போலீஸ் மற்றும் போக்குவரத்து துறையினர் வாகன உரிமையாளரை நோடியாக தொடர்பு கொள்ளவும், குறுஞ்செய்திகள் அனுப்பவும் வசதியாக, வாகன உரிமையாளர்கள் தங்களது தொலைபேசி எண்ணை வாகன் எனும் இணையதளத்தில் ஒரு வார காலத்துக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பெரும்பாலான வாகன உரிமையாளர்கள், தங்களது செல்போன் எண்ணை பதிவேற்றம் செய்யாததால் தகவல் தெரிவிப்பதிலும் இ-சலான்கள் வசூலிப்பதிலும் சிரமங்கள் ஏற்படுகிறது.
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து நிலுவையில் உள்ள இசலான் தொகையை வசூலிக்க, வாகன உரிமையாளர்கள் தங்களது செல்போன் எண்ணை சம்மந்தப்பட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதும், இ-சலான்கள் ஏதேனும் நிலுவையில் உள்ளதா என அடிக்கடி சரிபார்ப்பதும் அவசியமாகும். வாகன உரிமையாளர்கள் தங்களது செல்போன் எண், இணையத்தில் தவறாக பதிவேற்றியிருந்தாலோ அல்லது விடுபட்டிருந்தாலோ 15 நாட்களுக்குள் அதை சரி செய்துகொள்ள வேண்டும். இசலான் மற்றும் அபராத தொகை நிலுவையில் உள்ள வாகனங்களுக்கு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் எவ்விதமான பரிவர்த்தனைகளும் செய்யப்படாது. இ-சலான் வசூல் செய்யும் முறையை விரைவுப்படுத்துவதற்கு தேவையான உதவி மற்றும் ஆலோசனையை பெற போக்குவரத்து துறை அல்லது காவல் துறையை வாகன உரிமையாளர் அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post வாகன உரிமையாளர்கள் செல்போன் எண்ணை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் கலெக்டர் தகவல் அவசர காலங்களில் தகவல் தெரிவிக்க appeared first on Dinakaran.