
சென்னை,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழகத்தில் அனேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் நேற்று பரவலாக கனமழை பெய்தது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 11 செ.மீட்டர் கனமழை பெய்தது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 10 செ.மீட்டர், தங்கச்சிமடத்தில் 9 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 8 செ.மீட்டர், நாலுமுக்கு, காக்காச்சி பகுதியில் தலா 7 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
இந்த நிலையில், இந்திய பெருங்கடல் மற்றும் குமரிகடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இன்று (திங்கட்கிழமை) இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை (செவ்வாய்) முதல் வருகிற 8-ந்தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வெப்ப நிலையை பொறுத்தவரையில், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பைவிட அதிகம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.