
நியூயார்க்,
நார்வே நாட்டு செஸ் கிராண்ட்மாஸ்டர் மற்றும் ஐந்து முறை உலக செஸ் சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன் ஜீன்ஸ் அணிந்து போட்டியில் பங்கேற்க வந்ததற்காக உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் 2024-ல் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மேக்னஸ் கார்ல்சன் 2ஆம் நாள் போட்டிக்கு ஜீன்ஸ் அணிந்து வந்தார்.
இதையடுத்து போட்டியின் ஆடை கட்டுப்பாடு விதிமுறைகளை மீறியதற்காக கார்ல்சனுக்கு போட்டியின் நடுவர் 200 அமெரிக்க டாலர் அபராதம் விதித்தார். மேலும், கார்ல்சனை ஜீன்ஸ் உடையை மாற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதனை கார்ல்சன் ஏற்க மறுத்தார்.
இதன் காரணமாக போட்டியின் 9வது சுற்றிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக பிடே (FIDE) தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கார்ல்சன், பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் 2024-ல் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்து வெளியேறினார்.
இந்நிலையில், இந்த ஜீன்ஸ் பேண்டை அவர் ஏலத்தில் விட்டுள்ளார். இதில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் அந்த ஜீன்ஸ் பேண்ட் (36,100 அமெரிக்க டாலர்) இந்திய மதிப்பில் சுமார் ரூ. 31 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது. இந்த தொகையை அவர் அறக்கட்டளை ஒன்றிற்கு வழங்கி உள்ளார். ஜீன்ஸ் பேண்ட் ஒன்று ரூ. 31 லட்சத்துக்கு ஏலம் போனது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.