வளர்ச்சி பாதையில் தென் தமிழகம்; சிவகங்கை அருகே ரூ.342 கோடியில் சிப்காட் தொழிற்பேட்டை

2 weeks ago 3

சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு விவசாயம் தவிர குறிப்பிட்டு சொல்லும்படி தொழில்கள் எதுவும் இல்லை. ஒன்றிய அரசுக்கு சொந்தமான காரைக்குடி மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், தேசிய பஞ்சாலை கழகத்திற்கு (என்டிசி) சொந்தமான காளையார்கோவில் காளீஸ்வரா டெக்ஸ்டைல்ஸ் மில் உள்ளிட்ட சில மத்திய அரசு நிறுவனங்களில் நிரந்தர பணியாளர்கள் சுமார் 600 பேர் வரை பணிபுரிகின்றனர். காளையார்கோவில் காளீஸ்வரா மில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் செயல்படாமல் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக மில்லை இயக்க எந்த நடவடிக்கையையும் ஒன்றிய அரசு எடுக்கவில்லை.

சிவகங்கை அருகே கோமாளிபட்டி சேந்திஉடையநாதபுரத்தில் தமிழ்நாடு அரசிற்கு சொந்தமான கிராபைட் கனிம நிறுவனம் (டாமின்) 1994ம் ஆண்டு இயங்க தொடங்கியது. தொடங்கியபோது எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் போதிய விரிவாக்கமின்றியே தற்போதும் செயல்பட்டு வருகிறது. இவைகள் தவிர சிவகங்கை மாவட்டத்தில் அரசு நிறுவனங்கள் குறிப்பிட்டு சொல்லும்படி இல்லை. தனியார் டெக்ஸ்டைல்ஸ் மில்கள் சுமார் 10 மில்கள் உள்ளன. மானாமதுரை, சிவகங்கை உட்பட சில இடங்களில் சிறிய அளவிலான சிப்காட் அமைக்கப்பட்டு அங்கு தனியார் தொழிற்சாலைகள் நடத்தி வருகின்றனர். இதிலும் கூடுதல் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் இல்லை.

செயல்படாத ஸ்பைசஸ் பார்க்;
சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் அப்போதைய ஒன்றிய அரசு சார்பில் கடந்த 2013ம் ஆண்டு ரூ.20 கோடி மதிப்பீட்டில் ஏற்றுமதி வணிகம் மூலம் ரூ.1,500 கோடி வருவாயும், சுமார் 2000ம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்ட ஸ்பைசஸ் பார்க் இன்னும் முழுமையான செயல்பாட்டிற்கு வரவில்லை. இம்மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் என்ன நிலையில், எத்தனை தொழில் நிறுவனங்கள் இருந்ததோ அதே நிலையிலேயே தற்போதும் உள்ளது. அரசு சார்பில் கூடுதல் சிப்காட்கள், தொழிற்சாலைகள், கூடுதல் எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பணிபுரியும் தனியார் தொழில் நிறுவனங்கள் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளாக முன் வைக்கப்பட்டு வருகிறது.

சிப்காட் பூங்கா;
2030ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டை உயர்த்த வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தொழிற்சாலைகள் அமைத்து வேலைவாய்ப்பை உருவாக்கும் முயற்சியின் அடிப்படையில் மாநிலத்தில் 15க்கும் அதிகமான இடத்தில் புதிய சிப்காட் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகங்கையில் இருந்து சுமார் 15 கி.மீ தூரத்தில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இலுப்பக்குடி பகுதியில் இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தின் அருகில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டாலும் அதற்கான பணிகள் முழுமையாக தொடங்கப்படவில்லை. 2021ம் ஆண்டு ஆகஸ்டில் தமிழக சட்டமன்ற நிதி நிலை அறிக்கையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு நிலம் அடையாளம் காணும் பணி, நிலம் கையகப்படுத்தும் பணி உள்ளிட்டவைகள் தொடங்கின.

775 ஏக்கரில் தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் ஆய்வு செய்யப்பட்டு ரூ.342 கோடி மதிப்பீட்டில் தற்போது தொழிற்பேட்டை அமைவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இலுப்பக்குடி, அரசனூர், கிளாதரி உள்ளிட்ட கிராமங்களின் எல்லைகளில் சுமார் 775 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பேட்டை அமைய உள்ளது. அரசனூர் சமத்துவபுரத்தை சுற்றிலும் உள்ள 100 ஏக்கர் சிப்காட் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இலுப்பக்குடி, கிளாதரி பகுதியில் உள்ள 654 ஏக்கர் நிலங்கள் இன்னும் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. இதில் 632 ஏக்கர், இந்தோ – திபெத் எல்கை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தை சுற்றிலும் உள்ளன. சிப்காட் பெயர் மாற்றத்திற்கான கோப்புகள் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து, நில நிர்வாக ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பெருகும் வேலைவாய்ப்பு;
இந்த நிலங்கள் சிப்காட் தொழிற்பேட்டை நிலமாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு அனைத்துப்பணிகளும் தொடங்க உள்ளது. 36,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் இந்த தொழிற்பேட்டை உருவாக்கப்பட உள்ளது. சிவகங்கை, மதுரை மாவட்ட எல்லையில் இந்த தொழிற்பேட்டை தொடங்கப்பட்டாலும் முற்றிலும் சிவகங்கை மாவட்டத்திற்குள்ளேயே தொழிற்பேட்டை அமைய உள்ளது. இதன் மூலம் சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்பை பெற உள்ளனர். 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் தொழிற்பேட்டைக்கான பணிகள் முடிவடைந்து அரசு திட்டமிட்டுள்ளது போல் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிப்காட் திட்ட அலுவலர் கூறியதாவது, ‘‘மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தொழிற்பேட்டையை இணைக்கும் வகையில் 100 அடி சாலை போடப்பட உள்ளது. இச்சாலை அரசனூர் சமத்துவபுரம் முடிவடையும் இடத்தில் வர உள்ளது. சாலைக்காக அரசு நிலம் போக எஞ்சிய 6 ஏக்கர் நிலம் தனியாரிடம் கையகப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. மதுரை விமான நிலையம், ரயில் நிலையம், தூத்துக்குடி துறைமுகம் செல்லும் சாலைகளுடன் இணையும் வகையில் இந்த சாலை அமையும். ஏற்கனவே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொழிற்பேட்டைகளில் சிறிய நிறுவனங்கள் சில ஆண்டுகள் நடத்திவிட்டு மூடி விட்டு செல்கின்றனர். இதனால் பெரிய நிறுவனங்களை அரசே அழைத்து வருகிறது. அந்த நிறுவனங்களுக்கு நிலங்கள் 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்படும். பெயர் மாற்றம் பெற்ற பிறகு நிலங்கள் தொழில் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடும் பணி தொடங்கி விடும். டெக்ஸ்டைல்ஸ், புட் வேர், ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனங்கள் இதுவரை நிலங்களை பார்வையிட்டு சென்றுள்ளன. இங்கு தொடங்கப்படும் தொழிற்சாலைகளில் முழுமையாக உள்ளூரை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.’’ என்றார்.

தென் தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் வகையில் விருதுநகரில் பிரமாண்ட ஜவுளி பூங்கா, சிவங்கையில் 775 ஏக்கரில் தொழிற்பேட்டை, தூத்துக்குடி மாவட்டத்தின் தென்பகுதியான குலசேகரன்பட்டினம், உடன்குடியை மையமாக கொண்டு ராக்கெட் ஏவுதளம், ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிப்பதற்காகவும், அனல்மின் நிலைய பணிக்கான விரிவாக்கத்திற்கும் நிலங்கள் கையகப்படுத்தும் பணி, அனல்மின் நிலையம், துறைமுகம் அமைக்கும் பணிகள்,தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணி என பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில், உடன்குடி யூனியனுக்குட்பட்ட குதிரைமொழியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்து விரிந்து சிவப்பு கம்பளம் விரித்தாற்போல் காணப்படும் செம்மண் தேரியில் கார்னெட், இல்மனைட், ரூட்டைல், சிர்கான் உள்ளிட்ட ஏராளமான கனிமவளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. மாவட்டத்தில் திருச்செந்தூர், சாத்தான்குளம், சாயர்புரம் பகுதிகளில் செம்மண் தேரிக்காடுகள் உள்ளது. செம்மண் மேடுகளும், மணல் குன்றுகளும் நிறைந்து காணப்படுவது இந்த தேரிக்காடுகள். இதில் திருச்செந்தூர், சாத்தான்குளம் பகுதியில் உள்ள தேரிக்காட்டு செம்மணலுக்கு என்று பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன. நிமிடத்துக்கு நிமிடம் தேரிக்காட்டில் காட்சிகள் மாறிக்கொண்டே இருப்பதால், இந்த தேரிக்காட்டில் திசை கண்டுபிடித்துச் செல்வது மிகவும் சிரமம். இதுபோன்ற மணல் பகுதி, தூத்துக்குடியில் வேறு எந்தப் பகுதியிலும் காணப்படவில்லை. தேரிக்காட்டில் மணல் மேடுகள் சுமார் 40 அடிக்கு மேல் காணப்படும்.

இங்குதான் டைட்டானியம் கிடைக்கின்றது என்று டாடா நிறுவனத்தினர், கடந்த 2007ல் இப்பகுதியில் தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டனர். அப்போது ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகளால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 52 மில்லியன் டன் தேரிமணல் இருப்பு உள்ளது. இதில் இருந்து கனிமங்களைப் பிரித்தெடுக்கும் 2 தொழிற்சாலைகளை குதிரைமொழி, சாத்தான்குளம் பகுதிகளில் ரூ.1500 கோடி முதலீட்டில் நிறுவி தலா ரூ.1075 கோடி வருவாய் ஈட்ட தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளதாகவும், இதற்காக தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கும், ஒன்றிய அரசின் இந்திய அரிய மணம் நிறுவனத்திற்கும் (ஐஆர்இஎல்) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக குதிரைமொழி தேரியில் மாவட்ட கலெக்டர் இளம்பகவத்தும் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கலெக்டர் தலைமையிலான குழுவினர் மணல் மாதிரிகளை சேகரித்துச் சென்றுள்ளனர். 12 ஆயிரம் ஏக்கரில் இப்பகுதியில் செம்மண் தேரி வனப்பகுதி உள்ளதால் இங்குதான் அரசு சார்பில் தாது மணல் நிறுவனம் அமைக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இப்பகுதியில் தொழிற்சாலை சார்ந்த வேலைவாய்ப்புகளும் பெருகும் என்பதால் விரைவில் அடுத்தக்கட்ட பணிகளை துவங்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

The post வளர்ச்சி பாதையில் தென் தமிழகம்; சிவகங்கை அருகே ரூ.342 கோடியில் சிப்காட் தொழிற்பேட்டை appeared first on Dinakaran.

Read Entire Article