டெல்லி சட்டப்பேரவை தேர்தல் மூலம் மாநில அரசியலிலும் அசைக்க முடியாத சக்தியாக காங்கிரஸ் தன்னை நிரூபித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக நடந்து முடிந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை தான். ஆனால் இந்த முறை தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு தோல்வியல்ல என்பதும், புதிய எழுச்சியை நோக்கி பயணிக்க தொடங்கி இருப்பதையும் அனைத்து அரசியல் கட்சிகளாலும் உணர முடிவதுதான் உண்மை. அந்த அதிர்வு தான் இந்தியா கூட்டணி தலைவர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதி ஜனவரியில் அறிவித்தாலும் டிசம்பர் 1ம் தேதியே இந்தியா கூட்டணியில் இடம் பெற்று இருந்த கெஜ்ரிவால், ஆம்ஆத்மி தனித்து போட்டி என்று அறிவித்து, வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுவிட்டார். டெல்லி ஆம்ஆத்மி ஓட்டு என்பது காங்கிரஸ் பாரம்பரிய ஓட்டு, அதைத்தான் கெஜ்ரிவால் மடைமாற்றி ஆம்ஆத்மிக்கு வலுசேர்த்துக்கொண்டார். பஞ்சாப் மாநிலத்திலும் இதே கதைதான். இந்த முடிவுக்காக காத்திருந்த காங்கிரஸ் கட்சி மிகவும் புத்திசாலித்தனமாக இந்த தேர்தலை எதிர்கொண்டது.
2013ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 15 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக இருந்த அப்போதைய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஷீலா தீட்சித்தின் அரசியல் வாழ்வை முடித்து வைத்துவிட்டு, ஆம்ஆத்மியின் அதிகாரத்தை தொடங்கினார் கெஜ்ரிவால். இப்போது காங்கிரசின் முறை. கெஜ்ரிவாலின் அரசியல் வாழ்வை, ஷீலா தீட்சித் மகன் சந்தீப் தீட்சித் முடித்து வைத்து இருக்கிறார். புதுடெல்லி சட்டப்பேரவை தேர்தலில் கெஜ்ரிவால் தோல்விக்கு சந்தீப் தீட்சித் வாங்கிய 4568 வாக்குகள் தான் காரணம் என்பதை இப்போது ஆம்ஆத்மி உணர்ந்து விட்டது.
அந்த தொகுதி மட்டுமல்ல 16 தொகுதியில் வெற்றி வித்தியாசத்தை விட காங்கிரஸ் வேட்பாளர்கள் வாங்கிய வாக்குகள் அதிகம். இதில் கஸ்தூரிபாநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி 2ம் இடம். ஆம் ஆத்மி 3ம் இடம். டெல்லி சட்டப்பேரவை தேர்தல் ரிசல்ட் வந்த பிறகு தான், மிகவும் தாமதமாக காங்கிரஸ் இல்லாமல் தனித்து போட்டியிட்டது எவ்வளவு தவறு என்பதை ஆம்ஆத்மி உணர்ந்து இருக்கிறது. 10 சதவீத வாக்குகள் கடந்த தேர்தலை விட ஆம்ஆத்மிக்கு சரிந்துவிட்டது. ஆனால் காங்கிரசுக்கு 2 சதவீத வாக்குகள் கூடியிருக்கிறது.
இப்போது பஞ்சாப் மாநிலத்திலும் ஆம்ஆத்மியில் சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது. அங்கு பல எம்எல்ஏக்கள் காங்கிரஸ் பக்கம் தாவ தயாராக இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த மாற்றம் டெல்லி, பஞ்சாப்புடன் முடிந்துவிடப்போவது இல்லை. இந்த ஆண்டு இறுதியில் பீகார் மாநிலத்திலும், 2027ல் உ.பியிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளன. அங்கு காங்கிரசுக்கு குறைந்த இடம் ஒதுக்க அல்லது கெஜ்ரிவாலைப்போல் ஒதுக்கி வைக்க ராஷ்ட்ரீய ஜனதா தளமும், அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியும் திட்டமிட்டு இருந்தன.
அதனால் தான் உபியில் கடந்த நவம்பர் மற்றும் இந்த மாதம் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு தொகுதி கூட அகிலேஷ் ஒதுக்கவில்லை. இப்போது காங்கிரஸ் பலம் பெற்று வருவது கூட்டணி கட்சிகளுக்கு புரிந்து விட்டது. ஆனாலும் மேற்குவங்கத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்து இருக்கிறார் முதல்வர் மம்தா. நிலைமை காங்கிரசுக்கு சாதகமாக மாறியிருப்பதை தேசிய அரசியல் உணரத்தொடங்கி இருக்கிறது. இந்த சூழலை காங்கிரஸ் பீனிக்ஸ் பறவை போல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
The post வலுப்பெறுமா காங்கிரஸ்? appeared first on Dinakaran.