வலங்கைமான், மே 15: வலங்கைமான் தாலுக்காவில் 2000 ஏக்கர் இலக்குடன் முன்பட்ட குறுவைசாகுபடி நடைபெற்று வரும் நிலையில் வடமாநில தொழிலாளர்கள் நடவு பணிகளில்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வலங்கைமான் தாலுக்காவில் உள்ள 71 வருவாய் கிராமங்கள் குடமுருட்டி ஆறு வெட்டாறு வெண்ணாறு மற்றும் முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளன் ஆறு மூலம் பாசன வசதி பெறுகின்றது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது திருப்திகரமாக உள்ள நிலையில் வருகின்ற ஜூன் மாதம் 12ம் தேதி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனை அடுத்து குருவை சாகுபடி மேற்கொள்வதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் வலங்கைமான் தாலுகாவில் நடப்பாண்டு 8000 ஏக்கர் குருவை சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ள்ளது. இதில் முன்பட்ட குறுவையாக 2000 ஏக்கர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குருவை மற்றும் சம்பா சாகுபடியில் நேரடி விதைப்பு மற்றும் கை நடவு இயந்திரம் நடவு ஆகிய முறைகளில் சாகுபடி பணிகள் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டில் முன்பட்ட குறுவைப் பணிகளில் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் நிர்வாகச் செலவு குறைவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் நேரடி விதைப்பில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
அதற்கு அடுத்தபடியாக ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக இயந்திர நடவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதில் நேரடி விதைப்பு மூலம் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பும், இயந்திர நடவு மூலம் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பும், வழக்கமான விதை விட்டு கை நடவு மூலம் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பும் சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது .மின்மோட்டார்கள் மூலம் விவசாயிகள் முன் பட்ட குருவை சாகுபடி பணிகளை துவங்கி ஆர்வத்துடன் செய்து வருகின்றனர் .கடந்த சில ஆண்டுகளாக கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த வட மாநில தொழிலாளர்கள் வேளாண்மை பணிகளிலும் கடந்த சில ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் உள்ள ஊத்துக்காடு கிராமத்தில் முதன்முதலாக வட மாநில தொழிலாளர்கள் வேளாண்மை பணிக்கு ஈடுபடுத்தப்பட்ட நிலையில் தற்போது வலங்கைமான் பகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலுமே வட மாநில தொழிலாளர்கள் நடவுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இயந்திர நடவுக்கு நிகராக நடவு பணிகளில் ஈடுபட்டு வரும் வடமாநில தொழிலாளர்கள் நமது பகுதிகளில் வழங்கப்படும் ஊதியத்தை விட குறைவாக இருப்பதாலும்,ஆட்கள் பற்றாக்குறை தவிர்க்கும் வகையிலும், வட மாநில தொழிலாளர்களை விவசாயிகள் ஈடுபடுத்தி வருகின்றனர்.ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4700 என்ற சொற்பத்தொகையில் நடவு பணிகளில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். இவர்கள் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் சிறுசிறு குழுக்களாக பிரிந்து நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் டெல்டா மாவட்டங்களில் வேளாண்மை சாகுபடி பணிகளில் வட மாநில தொழிலாளர்கள் வருகையால் மேலும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது வலங்கைமான் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் முட்பட்ட குறுவை வட மாநில இயந்திர தொழிலாளர்களைக் கொண்டு முன் பட்ட குருவை தீவிரமாக நடைபெற்று வருகிறது, என்பது குறிப்பிடத்தக்கது.
The post வலங்கைமான் தாலுகாவில் 2 ஆயிரம் ஏக்கர் முன்பட்ட குறுவை சாகுபடி செய்ய இலக்கு appeared first on Dinakaran.