வர்த்தகத்தை நிறுத்திவிடுவேன் என டிரம்ப் மிரட்டலா? - மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு

1 day ago 4

 

டெல்லி,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டஸ் பிரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழ்நிலையும் உருவானது. பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதையடுத்து, இந்தியா மீது ஏவுகணை, டிரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியாவும் டிரோன்கள், ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர்.

இதனிடையே, இரு நாடுகளுக்கும் இடையே 10ம் தேதி சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இரு தரப்பும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 10ம் தேதி அறிவித்தார். அவரின் அறிவிப்பை பாகிஸ்தானும், இந்தியாவும் உறுதி செய்தன.

அதேவேளை, போர் நிறுத்தம் தொடர்பாக பேட்டி அளித்த டிரம்ப், இந்தியா,பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுத போரை தடுத்து நிறுத்திவிட்டேன். அணு ஆயுத போருக்கு இருந்த வாய்ப்பை தடுத்ததில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது. சண்டையை நிறுத்தாவிட்டால் இருநாடுகளுடனும் வர்த்தகம் செய்ய மாட்டேன் என எச்சரித்தேன்.

மோதல் தொடர்ந்தால் வர்த்தகம் தொடராது என்று இரு நாடுகளிடமும் தெரிவிக்கப்பட்டது. வணிகத்தை பயன்படுத்தி போரை நிறுத்தியதில் என்னைப் போல் யாரும் கிடையாது. சண்டை நிறுத்தம் ஒன்றே தீர்வு என்பதை வலியுறுத்தினேன்' என்றார்.

அதேவேளை, இந்தியாவை அமெரிக்கா மிரட்டியதா? என்று மத்திய அரசை விமர்சித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தன.

இந்நிலையில், பாகிஸ்தான் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் வர்த்தகத்தை நிறுத்திவிடுவேன் என்று டிரம்ப் மிரட்டினாரா? என்ற கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆபரேஷன் சிந்தூர் தொடங்கிய 7ம் தேதி முதல் இரு தரப்பிற்கும் இடையேயான ராணுவ நடவடிக்கை நிறுத்தம் அமலுக்கு வந்த 10ம் தேதி வரை ராணுவ நடவடிக்கை மற்றும் சூழ்நிலை குறித்து அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஆலோசனை, தகவல் பரிமாற்றம் இருந்தது. ஆனால், இந்த சூழ்நிலை மற்றும் ஆலோசனையின்போது வர்த்தகம் தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை' என்றார்.

இதன் மூலம் இருநாட்டு மோதலின்போது வர்த்தகத்தை நிறுத்திவிடுவேன் என்று டிரம்ப் கூறிய கருத்துக்கு இந்தியா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

அதேவேளை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்திற்கு கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா கூடுதல் வரி விதிக்க திட்டமிட்டுள்ளது.

Read Entire Article