
துபாய்,
டெஸ்ட் போட்டிகளில் சுவாரசியத்தை ஏற்படுத்தும் விதமாக கடந்த 2019-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற தொடரை ஐ.சி.சி. அறிமுகப்படுத்தியது. இந்த தொடரின் முதல் சீசனில் நியூசிலாந்து அணியும், 2-வது சீசனில் ஆஸ்திரேலியாவும் கோப்பையை கைப்பற்றின. 2 சீசன்களிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி 2-வது இடத்தை பிடித்தது.
தற்போது 3-வது சீசன் (2023-25-ம் ஆண்டு) இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி அடுத்த மாதம் 11-15-ம் தேதி வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பரிசுத்தொகையை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. அதன்படி கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.30.78 கோடியும், இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த அணிக்கு ரூ.18.46 கோடியும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோக இந்த தொடரில் கலந்து கொண்ட அணிகளுக்கு புள்ளி பட்டியலில் பிடித்த இடங்களை கணக்கில் கொண்டு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 3-வது இடம் பிடித்த இந்திய அணிக்கு ரூ.12.33 கோடி பரித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
4-வது இடம் பிடித்த நியூசிலாந்து அணிக்கு ரூ. 10.28 கோடியும், 5-வது இடம் பிடித்த இங்கிலாந்து அணிக்கு ரூ.8.22 கோடியும், 6-வது இடம் பிடித்த இலங்கை அணிக்கு ரூ.7.19 கோடியும், 7-வது இடம் பெற்ற வங்காளதேச அணிக்கு ரூ. 6.17 கோடியும், 8-வது இடம் பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ரூ.5.14 கோடியும் கடைசி இடம் பிடித்த பாகிஸ்தானுக்கு ரூ.4.11 கோடியும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.