
மத்திய மோடி அரசின் தொழிலாளர் விரோத, விவசாய விரோத கொள்கைகளை கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை அரசு சொத்துக்களை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடக் கோரியும், விவசாயிகளுக்கு அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும், மே 20 அன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடத்த ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியூசி, எல்.பி.எஃப்., ஏ.ஐ.சி.சி.டி.யு., எச்.எம்.எஸ். உள்ளிட்ட பத்து மத்திய தொழிற்சங்கங்களும் 70-க்கும் மேற்பட்ட துறைவாரி சம்மேளனங்களும் அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலை நிறுத்தத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்துவது குறித்த இரண்டு கட்ட ஆலோசனைகள் நடைபெற்ற பின்பு மாவட்டம் முழுவதும் பிரச்சார இயக்கங்களை, துண்டு பிரசுர விநியோகம், வாகன பிரச்சாரம், தெருமுனை கூட்டம் ஆகிய வடிவங்களில் கொண்டு செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் தூத்துக்குடியில் நேற்று மாலை, தாளமுத்துநகரில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் நடந்த பிரசார இயக்கத்தை எச்.எம்.எஸ். சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜ்குமார் துவக்கி வைத்தார். மட்டகடை ஒன்றாம்கேட், இரண்டாம்கேட், புதிய பேருந்துநிலையம், அண்ணாநகர், சிதம்பரநகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பிரசார இயக்கத்தில் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் பாலசிங்கம், தனலட்சுமி, ஞானசேகரன், சி.ஐ.டி.யு. சார்பில் ரசல், சங்கரன், ரவிதாக்கூர், பெருமாள், வயணபெருமாள் ஆகியோரும் எச்.எம்.எஸ். சார்பில் ராஜலட்சுமி, ராஜ்குமார் ஏ.சி.சி.டி.யு. சார்பில் சிவராமன், தொழிலாளர் முன்னேற்ற பேரவையின் சார்பில் கருப்பசாமி, செல்லப்பெருமாள் ஐ.என்.டி.யு.சி. சார்பில் பாலகிருஷ்ணன், சுரேஷ்குமார் ஆகியோர் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி பேசினர். சிதம்பரநகரில் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் தொழிலாளர் முன்னேற்ற பேரவையின் மாவட்ட செயலாளர் சுசிரவீந்திரன் பிரச்சாரத்தை நிறைவு செய்து பேசினார்.