வரலாற்றை திரித்து எடுக்கப்படும் திரைப்படம் தோல்வியடையும் - 'எம்புரான்' குறித்து கேரள பா.ஜ.க. தலைவர் விமர்சனம்

1 month ago 4

திருவனந்தபுரம்,

மோகன்லால் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லூசிபர்'. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகமாக 'எல் 2 எம்புரான்' வெளியாகியுள்ளது.

இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். கடந்த 27-ந்தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அதிவேகமாக ரூ.100 கோடி வசூல் செய்த மலையாள படம் என்ற புதிய சாதனையை 'எல் 2 எம்புரான்' படைத்திருக்கிறது.

இதனிடையே இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கலவரம் சார்ந்த காட்சிகள் 2002 குஜராத் கலவரத்தை நினைவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும், வகுப்புவாத பிரிவினையை தூண்டுவதாகவும் சர்ச்சை எழுந்தது. இதனால் வலதுசாரி ஆதரவாளர்கள் மற்றும் இந்துத்துவா அமைப்பினர் மோகன்லாலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து மோகன்லால் மன்னிப்பு கேட்டு பதிவிட்டு இருந்தார். இந்த சர்ச்சையை தொடர்ந்து படக்குழுவினர் படத்தின் சில காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், வரலாற்றை திரித்து எடுக்கப்படும் திரைப்படம் தோல்வியடையும் என கேரள மாநில பா.ஜ.க. தலைவர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நான் லூசிபர் திரைப்படத்தை பார்த்தபோது அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த படத்தின் தொடர்ச்சியாக வெளியாகும் 'எம்புரான்' திரைப்படத்தையும் பார்ப்பேன் என்று கூறியிருந்தேன்.

ஆனால் படக்குழுவினர் சுமார் 17 இடங்களில் காட்சிகளை திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. திரைப்படத்தை மீண்டும் தணிக்க செய்ய உள்ளனர். ஒரு திரைப்படத்தை வரலாறாக பார்க்க முடியாது. அதே சமயம், வரலாற்றை திரித்து எடுக்கப்படும் திரைப்படம் தோல்வியடையும்.

இந்த படத்தை நான் பார்க்கப்போவதில்லை. இது போல் திரைப்படங்கள் எடுக்கப்படுவது ஏமாற்றத்தை அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார். அதே சமயம், சில நாட்களுக்கு முன்பு திரைப்படத்தை திரைப்படமாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று ராஜீவ் சந்திரசேகர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article