
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் காப்புகட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினந்தோறும் சிறப்பு அபிஷேக அலங்காரம், தீபாராதனை மற்றும் திருவீதியுலா நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக, வெள்ளையன் ஊரணி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் இருந்து பெருமாள் எழுந்தருளி மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு மாலை மற்றும் சீர்வரிசையுடன் மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் நகரின் முக்கிய விதிகளில் வலம் வந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வந்தடைந்தார்.
கோவிலில் சீர்வரிசையை பெற்றதும் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண விழா நடைபெற்றது. விழாவில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
சித்திரை திருவிழாவில் இன்று அறுபத்து மூவர் திருவீதி உலா நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமை தேர் திருவிழாவும் ஞாயிற்றுக்கிழமை தெப்ப திருவிழாவும் நடைபெற உள்ளது.