சென்னை: கடந்த இரண்டு நாட்களில் ஜெட் வேகத்தில் தங்கம் விலை உயர்ந்ததால் வரலாற்றில் முதன் முறையாக ரூ.63 ஆயிரத்தை தங்கம் விலை தொட்டது. தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.7,905க்கும், சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.63,240க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கம் தினம் தினம் புது உச்சத்தை தொட்டு வருவதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த பிப்ரவரி 2ம் தேதி வரலாற்றில் முதல் முறையாக சவரனுக்கு ரூ.62,000 என்ற விலையைத் தொட்டு மக்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தது.
இந்நிலையில், இந்த வாரத்தின் தொடக்க நாளான கடந்த திங்கள்கிழமை யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது, கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் ரூ.7,705க்கும், பவுனுக்கு ரூ.680 குறைந்து ஒரு பவுன் ரூ.61,640க்கும் விற்பனையானது. இது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்தது. ஆனால் இந்த ஆறுதல் என்பது ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நேற்று முன்தினம் மீண்டும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,810க்கும், பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு பவுன் ரூ.62,480க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்றும் அதேபோன்று தங்கத்தின் விலை ரூ.760 அதிரடியாக உயர்ந்து பவுனுக்கு ரூ.63,240க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.7,905க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் இதற்கு முன்னர் இருந்த அனைத்து விலை உச்சத்தையும் இந்த தங்கம் விலை முறியடித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் பவுனுக்கு ரூ.1600 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்ககது. தை மாதத்தில், முகூர்த்த நாட்கள் அதிகம் வருகிறது என்பதால் இந்த நேரத்தில் விலை உயர்வு என்பது விஷேசத்திற்காக நகை வாங்க காத்திருந்தவர்களுக்கு மேலும் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இப்படி நாளுக்கு நாள் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் தங்கம் வாங்குவது என்பது வெறும் கனவாகி விடுமோ என மக்கள் அச்சப்படத் தொடங்கியுள்ளனர். கடந்த பிப்.2ம் தேதி வரலாற்றில் முதல் முறையாக பவுனுக்கு ரூ.62,000 என்ற விலையை தொட்டு பேரதிர்ச்சி கொடுத்தது.
* விலை உயர்வுக்கு காரணம்..?
அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு அந்நாட்டு அதிபர் டிரம்ப் மேற்கொண்டு வரும் சில சீர்திருத்த நடவடிக்கைகள், உலக நாடுகளுக்கு தலைவலியை கொடுத்து வருகிறது. இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்துள்ளது. இதன் மூலம் பொருளாதார போர் தொடங்கி இருப்பதாக சர்வதேச வல்லுநர்கள் கணித்துள்ளனர். மேலும், இரு தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படவில்லை. இதனால் தங்கம் விலை குறைந்த அளவு கூட குறையவில்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
The post வரலாற்றில் முதன்முறையாக தங்கம் விலை உச்சம் பவுன் ரூ.63,000ஐ தாண்டியது: கவலையில் நடுத்தர மக்கள்; 2 நாட்களில் பவுனுக்கு ரூ.1600 உயர்வு appeared first on Dinakaran.