புதுடெல்லி: காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில், தான், தனது கணவரின் சொத்து குறித்த அத்தியாவசிய தகவல்களை தெரிவிக்கவில்லை என்று பாஜ குற்றம்சாட்டியுள்ளது. கேரள மாநிலம், வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்காக பொது செயலாளர் பிரியங்கா காந்தி புதனன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அன்றில் இருந்து பிரியங்காவின் தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த சொத்து விவரங்களை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியை பாஜ விமர்சித்து வருகின்றது. பிரியங்காவின் வேட்பு மனுவில் பிரியங்கா மற்றும் அவரது கணவர் வதேராவின் சொத்துகள் தொடர்பான அத்தியாவசிய தகவல்களை வெளியிடவில்லை என்று பாஜ குற்றம்சாட்டி வருகின்றது.
இது குறித்து பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறுகையில், ‘‘உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அனைத்து குடிமக்களையும் கட்டுப்படுத்துகிறது. காந்தி குடும்பம் சட்டத்திற்கு அப்பாற்பட்டது இல்லை. தேர்தல் பிரமாண பத்திரத்தில் யாராவது தவறான தகவல் அளித்தால், தேர்தலில் போட்டியிடுவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை’’ என்றார். வேட்பு மனுக்கள் பரிசீலனை நாளை நடைபெற உள்ளது.
The post வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடும் பிாியங்காகாந்தி வேட்புமனுவில் சொத்து பட்டியல் இல்லையா? பாஜ குற்றச்சாட்டால் பரபரப்பு appeared first on Dinakaran.