தமிழில் பம்பாய், இந்தியன், முதல்வன், பாபா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல நடிகையான மனிஷா கொய்ராலா புற்றுநோய் பாதிப்பில் இருந்து குணமடைந்த பிறகு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மனிஷா கொய்ரலா அளித்துள்ள பேட்டியில், "சினிமா துறையில் வயது என்பது ஒரு பிரச்சினை இல்லை. கதாநாயகர்களின் வயது பற்றி யாரும் கண்டு கொள்வது இல்லை.
ஆனால் கதாநாயகிகளை மட்டும் வயதை வைத்து விமர்சனம் செய்கிறார்கள். வயதான நடிகைகளுக்கு தாய், சகோதரி வேடங்கள் கொடுக்கலாம் என்கின்றனர். வயதான நடிகைகளும் எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்யும் திறமை உள்ளவர்கள். அதிரடி கதாபாத்திரங்களில் கூட வயதான நடிகைகள் நடிக்கிறார்கள். இதற்கு முன்பு எத்தனையோ மூத்த கதாநாயகிகள் இதனை நிரூபித்துள்ளனர்.
நானும் எப்படிப்பட்ட கதாபாத்திரத்தை கொடுத்தாலும் சவாலாக எடுத்துக் கொண்டு நடிப்பேன். புதிய கதாபாத்திரங்களில் நடித்து எனது திறமையை நிரூபிக்க விரும்புகிறேன். வயது என்பது வெறும் நம்பர் மட்டும்தான். 50 வயதை கடந்தும் அற்புதமான வாழ்க்கை வாழலாம். எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் சந்தோஷமாக, ஆரோக்கியமாக வாழ வேண்டும். நான் அந்த லட்சியத்தோடுதான் வாழ்கிறேன்" என்றார்.