வேலூர், ஏப்.11: வேலூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே பகலில் 105.1 டிகிரி வெயில் நேற்று கொளுத்தியது,இரவில் திடீரென இடி, சூறைக்காற்றுடம் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்ததால் வேலூர் இருளில் மூழ்கியது. தமிழகத்தில் கோடைக்காலமான ஏப்ரல், மே மாதங்களில் மற்ற மாவட்டங்களை விட வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். வழக்கமாக மே மாதத்தில் கத்திரி வெயில் சமயத்தில் வேலூர் மாவட்டத்தில் தினமும் 100 டிகிரிக்கும் மேல் வெயில் சுட்டெரிக்கும். ஆனால் இந்தாண்டு மார்ச் மாதத்திலேயே வெயில் சதம் அடித்தது.
இதற்கிடையில், தமிழ்நாட்டில் நேற்று முதல் வரும் 14ம் தேதி வரை வட மாவட்டங்களில் 40சி முதல் 42சி என்ற அளவில் வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட அதிகம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் நேற்று முதல் 14ம் தேதி வரை வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்பதால் அத்தியாவசிய பணிகளை தவிர்த்து வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தி இருந்தார்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 101 டிகிரி வரை வெயில் பதிவானது. இந்நிலையில் வழக்கத்தை விட நேற்று வெயிலின் தாக்கம் காலை முதலே அதிகரித்து காணப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு அதிகபட்சமாக 105.1 டிகிரி வெயில் கொளுத்தியது. சுட்டெரித்த வெயிலால் வேலூரின் முக்கிய சாலைகளில் மதிய நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்ேசாடியது. மேலும், இளநீர், கரும்புசாறு, குளிர்பானம், ஜஸ்கிரீம், ஜூஸ் கடைகளில் மக்கள் திரண்டனர்.
இந்நிலையில், நேற்றிரவு 7 மணியளவில் வேலூர், காட்பாடி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. பகலில் கொளுத்திய வெயிலால், வாடி வதங்கிய மக்களுக்கு, இரவு நேரத்தில் பெய்த மழை பெரும் ஆறுதல் அளித்தது. இதற்கிடையே காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர் கிழிந்தது. விருதம்பட்டில் சாலையோரம் மரம் முறிந்தது. சத்துவாச்சாரியில் தென்னை மரம் சாலையில் விழுந்தது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல், மாவட்டத்தில் பல பகுதிகளில் மரம் சாலையில் முறிந்தது. திடீரென பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதற்கிடையே, கழிஞ்சூர் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள வேப்பம், பனை மரங்கள் சூறைக் காற்றால் முறிந்து சாலையில் விழுந்தது. மேலும், மரக்கிளை அங்கிருந்த மின்கம்பத்தின் மீது விழுந்ததில் மின்கம்பம் உடைந்தது. இதுகுறித்து தகவலறிந்த மாநில நெடுஞ்சாலை கோட்டபொறியாளர் தனசேகரன் தலைமையில், உதவி கோட்ட பொறியாளர் பிரகாஷ் மற்றும் ஊழியர்கள் ேஜசிபி, மரம் அறுக்கும் கருவியுடன் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
ேமலும், காட்பாடி போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். வேலூர் மாவட்டத்தில் நேற்றிரவு சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால், பல இடங்களில் மின்கம்பங்கள் உடைந்தன. இதனால் காட்பாடி, லத்தேரி, பனமடங்கி, சத்துவாச்சாரி, ரங்காபுரம், அரியூர், ஊசூர், தொரப்பாடி, வடுகன்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகள் இருளில் மூழ்கின. மின் தடை தொடர்பாக தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் உடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
The post வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் வன விலங்குகளுக்கு டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பிய வனத்துறையினர். appeared first on Dinakaran.