காசா: காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கையை நிரந்தரமாக நிறுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஹமாஸ் அறிவித்துள்ளது. இதற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் ஹமாசுக்கு எதிராக காசாவின் போர் நடவடிக்கை என்பது விரைவில் முடிவுக்கு வரும் என தெரிகிறது.
அண்டை நாடுகளான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் காசா விவகாரத்தில் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இது கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் போராக மாறியது. இஸ்ரேல் நாட்டுக்குள் நுழைந்து ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலில் இருந்த 1,200 பேர் வரை கொல்லப்பட்டனர். 251 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதையடுத்து இஸ்ரேல் போரை தொடங்கியது. இந்த போர் கடந்த 15 மாதமாக நடந்தது. இஸ்ரேல் காசாவுக்குள் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதலை நடத்தியது. இதில் 51 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அதன்பிறகு கடந்த ஜனவரி மாதம் 90 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. எகிப்து மத்தியஸ்தம் செய்ததில் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நிறுத்தம் கையெழுத்தானது. அதன்பிறகு இஸ்ரேல், தனது நாட்டில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது. ஹமாஸ், இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவித்தது. ஆனால் பணய கைதிகளை விடுவிக்க காலதாமதம் செய்ததால் இந்த போர் நிறுத்தத்தை இஸ்ரேல் நிறுத்தியது. இதனால் கடந்த மாதம் மீண்டும் காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. தற்போதும் போர் நடந்து
வருகிறது.
இந்நிலையில்தான் தற்போது ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலுடன் நிரந்தரமாக போர் நிறுத்தம் செய்ய தயார் என்று அறிவித்துள்ளது. அதோடு தங்களிடம் உள்ள 59 பணய கைதிகளை விடுவிக்கவும் தயார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஹமாஸ் அமைப்பின் பேச்சுவார்த்தை குழுவின் தலைவராக உள்ள கலீல் அல் ஹயா தொலைக்காட்சி வாயிலாக நேற்று உரையாற்றினார். அவர் கூறும்போது, இஸ்ரேலுடன் இடைக்கால போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் சரி என்று சொல்லாது. அரசியல் காரணங்களுக்காக தற்காலிக போர் நிறுத்தங்களை இஸ்ரேல் கையில் எடுக்கிறது. இதற்கு இனி ஹமாஸ் ஒப்பு கொள்ளாது. அதேபோல் இடைக்கால போர் நிறுத்தம் என்ற பெயரில் ஹமாஸின் ஆயுதங்களை பறிக்கும் இஸ்ரேலின் கோரிக்கையை ஏற்க மாட்டோம். போரை முழுமையாக முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் ஒப்புக்கொண்டால் மட்டுமே மீதமுள்ள 59 பணய கைதிகளை விடுவிப்போம்’ என்றார்.
இதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொள்ளும்பட்சத்தில் இருநாடுகள் இடையேயான போர் முடிவுக்கு வரும். முன்னதாக ஹமாஸ் அமைப்புடன் 45 நாள் இடைக்கால போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக இஸ்ரேல் பேச்சுவார்த்தை நடத்தியது. அதனை ஹமாஸ் ஒப்புக்கொள்ளவில்லை. கடந்த வாரம் கூட எகிப்து தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இப்படியான சூழலில் தான் இஸ்ரேல் முழு போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டால் 59 பணயக்கைதிகளையும் விடுவிப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
The post போர் முடிவுக்கு வருகிறதா..? இஸ்ரேலுடன் நிரந்தர போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயார்: ஹமாஸ் அதிரடி அறிவிப்பு appeared first on Dinakaran.