மீரட்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கள்ளக்காதலனுடன் நெருக்கமாக இருந்ததை கணவர் பார்த்துவிட்டதால் அவரை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, அவரது உடல் மீது பாம்பைவிட்டு, பாம்பு கடித்து இறந்ததாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டை சேர்ந்தவர் அமித் (25). இவரது மனைவி ரவிதா. சில ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. 3 குழந்தைகள் உள்ளனர். அமித், கூலி வேலை செய்து வந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பமாகும். இந்நிலையில் கடந்த 12ம் தேதி காலையில், அமித்தை படுக்கையிலிருந்து எழுப்ப சென்றார் ரவிதா. அவர் மீது பாம்பு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். ஒரு பாம்பு அவரை கொத்தி கொண்டிருந்ததை கண்டு பீதியடைந்தனர். இதை சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டிருந்தனர்.
தகவலறிந்து போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில், அமித் உடலை பாம்பு 10 முறை கடித்திருப்பதும், ஆனால் பாம்பு கடிப்பதற்கு முன்பே அமித்தின் கழுத்து நெரிக்கப்பட்டதாகவும் தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர்கள் அளித்த பிரேத பரிசோதனை முடிவை வைத்து ரவிதாவிடம் போலீசார் விசாரித்தனர். முதலில் மறுத்தார். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், ‘நான்தான் கணவரை கொலை செய்தேன்’ என ஒப்புக்கொண்டார்.
ரவிதாவின் வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியிருப்பதாவது:
அமித்தின் நண்பரான அமர்தீப்பும் ரவிதாவுக்கும் ஓராண்டாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர், அடிக்கடி அமித்தை பார்க்க வீட்டிற்கு வந்தபோது காதல் தீ பற்றியது. இந்த விவகாரம் அமித்துக்கு தெரியவர மனைவியை கண்டித்தார். அவர் கேட்கவில்லை. உறவை தொடர்ந்தனர். கள்ளக்காதல் தொடர்பாக கணவனுக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ஒரு முறை ரவிதாவும் அமர்தீப்பும் தனிமையில் இருந்ததை அமித் பார்த்துவிட்டார். ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்ற அவர், ரவிதாவிடம் சண்டையிட்டதாக தெரிகிறது. அதனால் அமித்தை கொலை செய்ய ரவிதா திட்டமிட்டுள்ளார். இதற்காக காதலனிடம் யோசனை கேட்டுள்ளார். அவரும் உதவியுள்ளார்.
அதைத் தொடர்ந்துதான், கடந்த 12ம் தேதி இரவு அமித் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்றனர். மேலும் கொலையை இயற்கை மரணமாக மாற்ற ரூ.1000 கொடுத்து பாம்பை வாங்கி வந்ததாக தெரிகிறது. இதை அமித்தின் உடல் மீது விட்டுவிட்டு ஒன்றும் தெரியாதது போல் அழுது கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை நம்ப வைக்க முயற்சித்தார் ரவிதா. ஆனால் இதுகுறித்து வனத்துறையினரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, ‘பாம்புகள் பொதுவாக மனிதரை ஒரு முறை கொத்தினால் அந்த இடத்திலிருந்து உடனே சென்றுவிடும்’ என்றனர். ஆனால் அமித்தின் உடல் மீது பாம்பு இருந்துள்ளது.
மேலும் அமித்தை 10 முறை பாம்பு கடித்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பிரேத பரிசோதனையும் போலீசார் சந்தேகித்தபடியே வந்ததால் விசாரணையை தீவிரப்படுத்தி ரவிதாவை கைது செய்து சிறையிலடைத்தனர்.
ரவிதாவும் அமர்
தீப்பும் தனிமையில் இருந்ததை அமித் பார்த்துவிட்டார். ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்ற அவர், ரவிதாவிடம் சண்டையிட்டதாக தெரிகிறது. அதனால் அமித்தை கொலை செய்ய ரவிதா திட்டமிட்டு உள்ளார்.
The post கள்ளக்காதலனுடன் நெருக்கமாக இருந்ததை பார்த்ததால் பாம்பை விட்டு 10 முறை கொத்த வைத்து கணவரை கொலை செய்த கொடூரம்: கழுத்தை நெரித்து கொன்று நாடகமாடிய மனைவி கைது appeared first on Dinakaran.