சென்னை,
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவந்த பிரபாஸ், 'பாகுபலி' படத்தின் மூலம் பான் இந்தியா அளவில் பிரபலமானார். பின்னர் இவரது நடிப்பில் வெளியான 'சலார் மற்றும் கல்கி 2898 ஏ.டி' படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களான அமைந்தன. அதனை தொடர்ந்து தற்போது, மாருதி இயக்கத்தில் ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகும் 'தி ராஜா சாப்' படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
பீப்பிள் மீடியா பேக்டரி மற்றும் ஜிஎஸ்கே மீடியா ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தினை தயாரிக்கிறது. தமன் இசையமைக்கும் இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் டீசர் அப்டேட் குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, "தி ராஜா சாப் படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து பகல் மற்றும் இரவு என வேகமாக நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்படத்தின் டீசர் கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டின் போது வெளியாகும் என பல்வேறு ஊகங்கள் பரவுவதை நாங்கள் கவனித்தோம். இந்த பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். சரியான நேரத்தில் அப்டேட்டுகளை அதிகாரபூர்வமாக அறிவிப்போம். இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும், அது நல்ல அனுபவத்தை தரும்" என்று தயாரிப்பு நிறுவனம் அதில் தெரிவித்துள்ளது.