
மேட்டூர்,
தொடர் மழை எதிரொலியாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த வாரம் இந்த அணைகளில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு பெருக்கெடுத்து வந்தது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது. இதன்காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் மளமள என்று உயர்ந்து கொண்டே வந்தது.
இதன் எதிரொலியாக கடந்த 29-ந் தேதி மாலையில் மேட்டூர் அணை தன் உச்சபட்ச நீர்மட்டமான 120 அடியை எட்டி இந்த ஆண்டில் முதன்முறையாக நிரம்பியது. தொடர்ந்து அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்பிறகு கர்நாடக மாநிலத்தில் மழையளவு குறைய தொடங்கிய நிலையில் அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது.
குறிப்பாக அணைக்கு வரத்து நீரை விட தண்ணீர் திறப்பு அதிகமாக இருந்ததால் கடந்த 3-ந் தேதி முதல் 120 அடிக்கும் கீழாக மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது. அதாவது கடந்த 2-ந்தேதி 120 அடியாக இருந்த அணை நீர்மட்டம், 3-ந் தேதி காலையில் 119.91 அடியாகவும், நேற்று முன்தினம் 119.60 அடியாகவும் நீர்மட்டம் குறைந்தது. அதேநேரத்தில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 29 ஆயிரத்து 423 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
நேற்று அணைக்கு வினாடிக்கு 40 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 58 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 40 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று 58 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.