
நாங்குநேரி சன்னதி தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கண்ணன். இவரும் நாங்குநேரி காமராஜ் தெருவைச் சேர்ந்த கைலாசம் பார்வதி நாதன் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாங்குநேரி பேருந்து நிலையத்துக்கு செல்வதற்கு அரசு பேருந்தில் ஏறினர். அதில் 2 பேருக்கும் சேர்த்து டிக்கெட் கட்டணம் ரூ.50 செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுள்ளனர்.
நாஙகுநேரி பைபாஸ் ரோட்டில் பேருந்து சென்றபோது, நடத்துநர் அந்த பேருந்து நாங்குநேரி பேருந்து நிலையத்துக்கு போகாது என்றும், பைபாஸ் வழியாக நாகர்கோவிலுக்கு நேரடியாக செல்லும் என்பதால் கீழே இறங்குமாறு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இருவரும் நடத்துநரிடம் விவரம் கேட்டு உள்ளனர். ஆனால் நடத்துநர் மறுத்ததால், மேலாண்மை இயக்குனர் அலுவலகத்துக்கு செல்போன் மூலம் பேசி உள்ளனர். அந்த அலுவலகத்தில் பேசிய ஊழியர் நாங்குநேரி ஊருக்குள் சென்று பேருந்து நிலையத்தில் இருவரையும் இறக்கி விட உத்தரவிட்டுள்ளார். பின்னர் நாங்குநேரி பேருந்து நிலையம் சென்று இருவரையும் இறக்கி விட்டுள்ளனர்.
அதேநேரம் நெல்லையில் இருந்து நாங்குநேரி பேருந்து நிலையத்துக்கு கட்டணமாக ஒருவருக்கு ரூ.23 வசூலிப்பதற்கு பதில் நடத்துநர், ரூ.25 வீதம் 2 பேருக்கும் சேர்த்து ரூ.50 வசூல் செய்து விட்டார்.
இதனால் பாதிக்கப்பட்ட இருவரும் வக்கீல் மூலம், நெல்லை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி தாகூர், உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் வழக்கை விசாரித்து, இருவருக்கும் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடு அபராதமாக ரூ.7 ஆயிரம், வழக்கு செலவு ரூ.5 ஆயிரமும் சேர்த்து மொத்தம் ரூ.12 ஆயிரத்தை நடத்துநர் வழங்குமாறு தீர்ப்பு அளித்தனர்.