இந்தியாவில் முடங்கிய ராய்ட்டர்ஸ் எக்ஸ் வலைதள கணக்கு சீரானது

5 hours ago 3

புதுடெல்லி,

சர்வதேச செய்தி வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இருந்து வருகிறது. இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம் பல்வேறு நாடுகளுக்கும் தகவல்களை வழங்கி வருகின்றன. இதேபோன்று, அதன் எக்ஸ் வலைதளத்தின் வழியேயும் செய்திகள் தரப்படுகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் செயல்பட்டு வந்த, அதன் எக்ஸ் வலைதள கணக்கு திடீரென நேற்று முடங்கியது. இதனால், செய்திகளை படிக்க முடியாமல் வாசகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், இதற்கும் மத்திய அரசுக்கும் தொடர்பு இல்லை என பதிலளிக்கப்பட்டது.

இதுபற்றி மத்திய அரசின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் வலைதள கணக்கை தடை செய்யும்படி எங்கள் தரப்பில் இருந்து எந்த கோரிக்கையும் விடப்படவில்லை. எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அதனை சரி செய்வதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறோம். விரைவில் அது சரியாகும் என கூறினார்.

கடந்த மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பல்வேறு கணக்குகளுடன் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் கணக்கை தடை செய்ய கோரி வலியுறுத்தப்பட்டன. ஆனால், கட்டாயப்படுத்தப்படவில்லை. அப்போது இந்தியாவில் பல்வேறு கணக்குகள் முடக்கப்பட்டன. ஆனால், ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு முடக்கப்படவில்லை.

இந்நிலையில், எலான் மஸ்க் தலைமையிலான எக்ஸ் நிறுவனம், இந்த கோரிக்கைக்கு தற்போது செயலாற்றி உள்ளது. இந்நிலையில், ராய்ட்டர்ஸ் கணக்கு முடக்கத்திற்கு மத்திய அரசின் அப்போது மேற்கொள்ளப்பட்ட வலியுறுத்தல் காரணமில்லை என்ற நிலையில், முடக்கத்திற்கு விளக்கமளிக்கும்படி எக்ஸ் நிறுவனத்திடம் அரசு கேட்டது. தடையை நீக்கவும் கேட்டு கொண்டது.

எனினும், கோர்ட்டு உத்தரவு அல்லது உள்ளூர் சட்டங்களின்படி இந்த முடக்கம் அவசியம் ஆகியுள்ளது என ராய்ட்டர்ஸ் நிறுவன எக்ஸ் தளத்தில் அதற்கான விளக்கம் தரப்பட்டது. ஆனால், ராய்ட்டர்ஸ் டெக் நியூஸ், ராய்ட்டர்ஸ் பேக்ட் செக், ராய்ட்டர்ஸ் ஆசியா மற்றும் ராய்ட்டர்ஸ் சீனா ஆகியவற்றின் எக்ஸ் வலைதள கணக்குகள் இந்தியாவில் முடங்கவில்லை. அதில் செய்திகள் கிடைக்கப்பெற்றன.

இந்நிலையில், நேற்று மாலை இந்தியாவில் ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் வலைதள கணக்கு முடக்கம் சரி செய்யப்பட்டது. இதனால், மீண்டும் செய்திகள் வெளிவர தொடங்கியுள்ளன. அதனுடன் இந்தியாவில் வெளிவரும், துருக்கி ஊடகங்களில் ஒன்றான டி.ஆர்.டி. வேர்ல்டு மற்றும் சீனாவின் ஆங்கில நாளிதழான குளோபல் டைம்ஸ் ஆகியவற்றிற்கான எக்ஸ் சமூக ஊடக கணக்குகளும் சரி செய்யப்பட்டன.

Read Entire Article