வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலமாக 7 மாதத்தில் வீடு தேடி சென்ற 19 ஆயிரம் ஓட்டுநர் உரிமங்கள்

3 months ago 22

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் வடக்கு மற்றும் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலமாக வீடுகளை தேடி ஓட்டுநர் உரிமங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
காலத்திற்கு ஏற்ப நாமும் மாறிக் கொண்டே வருகிறோம். தொழில்நுட்பங்களும் இதற்கு ஏற்றார்போல் மாறி வருகிறது. நம்மையும் மாற்றி வருகிறது.

போக்குவரத்திற்காக முதலில் மாட்டு வண்டிகள் பூட்டப்பட்டு அதில் பயணித்தனர். இதன் பின்னர் தனி மனித பயன்பாட்டிற்கு சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது. நாளடைவில் தொழில்நுட்ப வளர்ச்சியின் அசுர வேகத்தால் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்கள் பயன்பாட்டிற்கு வந்தன. டீசலில் வாகனங்கள் இயங்கின. இதன்பின்னர் பெட்ரோலில் இயங்கின. தற்போது பேட்டரியில் வாகனங்கள் இயங்கி வருகின்றன.

இந்த வாகனங்கள் அனைத்தையும் பதிவு செய்வது கட்டாயம். இதுபோல் வாகன ஓட்டுநர் உரிமங்களும் கட்டாயம் ஆகும். இந்த வாகனங்களை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. வாகனங்களை வாங்குகிறவர்கள் அங்கு சென்று பதிவு செய்து வாகன பதிவு எண்களை பெற்று வருகிறார்கள். இதுபோல் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பு மற்றும் பழகுநர் உரிமம், வாகன தகுதி சான்றுகள் போன்றவையும் இந்த அலுவலகங்கள் மூலமாக வழங்கப்படுகிறது.

போக்குவரத்து அதிகாரிகள் விபத்துகளை தடுக்க சாலை பாதுகாப்பு தொடர்பாக வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சோதனையில் தலைக்கவசம் அணியாதவர்கள், சீட் பெல்ட் அணியாதவர்கள் மற்றும் தகுதி சான்று புதுப்பிக்காத வாகனங்கள் மற்றும் அதிகளவு பாரம் ஏற்றி வருகிற வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மது போதையில் வாகனம் ஓட்டுகிறவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படுகிறது. இதுபோல் விபத்து ஏற்படுகிற பகுதிகளில் தவறில் ஈடுபட்ட வாகனம் மற்றும் ஓட்டுநர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஏராளமான பணிகள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களை தேடி தினமும் பலர் வந்து கொண்டிருக்கிறார்கள். அலுவலகங்களிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். அதிகாரிகளும் பரபரப்பாக இயங்கி வருவார்கள். வாகனங்களை சரியாக இயக்கி காண்பிக்கிறவர்களுக்கு மட்டுமே உரிமமும் வழங்கப்படும். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பொதுமக்கள் சிரமத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

வாகன ஓட்டுநர் உரிமம் பெற இளம்பெண்கள் மற்றும் வாலிபர்கள் அதிகளவு வருகிறார்கள். இவர்கள் வாகனங்களை ஓட்டி காண்பித்த பிறகு உரிமம் பெற மற்றும் வாகன பதிவு ஆர்.சி. பெற மீண்டும் ஒரு நாள் அலுவலகத்திற்கு சென்று வர வேண்டி இருந்தது. இதுபோல் உரிமம் புதுப்பிப்பவர்களும் அலுவலகம் சென்று உரிமம் வாங்கி வந்தனர். விண்ணப்பிக்கிறவர்களின் வசதிக்காக சிறப்பான திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி வாகன ஓட்டுநர் உரிமம் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கே தபால் மூலமாக ஆவணங்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.

இதனால் வாகன ஓட்டுநர் உரிமம் பெற வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டியதில்லை. இந்த நடைமுறை பலரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. தொழில் நகரமான திருப்பூரில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுபோல் ஓட்டுநர் உரிமம் கேட்டு விண்ணப்பிக்கிறவர்களும் அதிகரித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இருந்து ஓட்டுநர் உரிமங்கள் மும்முரமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி ஆனந்த் கூறியதாவது: இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் தொடர்பாக தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள இந்த திட்டம் சிறப்பான திட்டமாக இருந்து வருகிறது. வாகன உரிமம் பெற ஒரு நாள் மற்றும் உரிமம் வாங்க ஒரு நாள் என பலரும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு வந்து சென்றனர். தற்போது உரிமம் வாங்க வர வேண்டாம். வீடுகளுக்கே அனுப்பி வருகிறோம். இந்த திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி நடைமுறைக்கு வந்தது.

இதன் வாயிலாக திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 11 ஆயிரத்து 921 ஓட்டுநர் உரிமமும், தெற்கு வட்டார போக்குவரத்து வட்டார அலுவலகத்தில் 7 ஆயிரத்து 516 என மொத்தம் 19 ஆயிரத்து 437 பேருக்கு கடந்த 7 மாதத்தில் ஓட்டுநர் உரிமம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இதுபோல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 12 ஆயிரத்து 497 வாகனங்களும், தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 6 ஆயிரத்து 832 வாகனங்களும் என மொத்தம் 19 ஆயிரத்து 329 ஆர்.சி. புத்தகமும் தபால் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற திட்டங்களால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலமாக 7 மாதத்தில் வீடு தேடி சென்ற 19 ஆயிரம் ஓட்டுநர் உரிமங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article