வடசென்னையின் கொடுங்கையூரில் குப்பை எரிவுலை திட்டத்தை கைவிடுக: துரை வைகோ வலியுறுத்தல்

5 hours ago 3

சென்னை: கொடுங்கையூரில் குப்பை எரிவுலைத் திட்டத்தை கைவிட துரை வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து துரை வைகோ எம்பி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகரத்தில் உருவாகும் திடக்கழிவுகளை எரித்து அழிக்க, சென்னை மாநகராட்சியானது வடசென்னையின் கொடுங்கையூரில் ஒரு குப்பை எரிவுலையை அமைக்கவிருப்பதாக அறிவித்து, அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறது. இத்திட்டம் சுற்றுச்சூழலையும் மக்களின் உடல் நலனையும் வாழ்வாதாரங்களையும் கடுமையாக பாதிக்கக் கூடியதாக இருப்பதால் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளும் அப்பகுதி பொதுமக்களும் தீவிரமாக எதிர்த்து வருகின்றனர். குப்பை எரிவுலைகளிலிருந்து வெளிவரும் வாயுக்களில் டையாக்ஸின்கள், ஃப்யூரான்கள் உள்ளிட்ட பல்வேறு நச்சு வாயுக்கள் வெளியாவது தடுக்க முடியாதது. இவை புற்றுநோய் உள்ளிட்ட தீவிர உடல்நலக் கோளாறுகளை உருவாக்கக் கூடியவை.

டெல்லியில் செயல்பட்டு வரும் ஒரு குப்பை எரிவுலையானது, அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு அதிகமாக இந்த நச்சு வாயுக்களை வெளியேற்றியதற்காக, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது இங்கு நினைவுகூரத்தக்கது. இந்த உலையின் சாம்பல் கொட்டப்படும் இடங்களுக்கு அருகே அதிகரிக்கும் கருச்சிதைவு உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகளை, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை புலனாய்வு செய்து வெளியிட்ட செய்தியானது, சென்ற ஆண்டு நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. குப்பை எரிவுலைகள், மிக அதிக செலவு பிடிக்கக் கூடியவை என்பதோடு, குப்பையைக் கையாளும் மறுசுழற்சி, மட்கச் செய்தல் போன்றவற்றுக்கான உட்கட்டமைப்புகளை அழிக்கக் கூடியவை. காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகள்தான் இனி வரும் நமது சமூகப் பொருளாதார அரசியலை வடிவமைக்க இருக்கின்றன என்ற சூழலில், குப்பை எரிவுலைகள் போன்ற திட்டங்களை முன்னிறுத்துவது சரியான தீர்வாக அமையாது.

ஆகவே, கையாள முடியாத நச்சுக் கழிவுகளை உருவாக்கும் குப்பை எரிவுலைத் திட்டத்தைக் கைவிட்டு, குப்பைகளை அவற்றின் உற்பத்தியிலேயே கட்டுப்படுத்துவது, திடக்கழிவுகளை முழுமையாக வகைபிரித்துப் பெறுவது, மட்கும் கழிவுகளை முழுமையாக மட்கச் செய்வது, மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளை வகைபிரித்து மறுசுழற்சி செய்வது, இவை அனைத்துக்குமான உட்கட்டமைப்புகளை அதிகரிப்பது போன்ற, சூழலுக்குப் பாதுகாப்பான, அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும், செலவு குறைந்த மாற்று வழிகளைப் பரிசீலிக்க, தமிழ்நாடு அரசை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். வடசென்னையில் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் எந்த மூலையிலும் இத்தகைய குப்பை எரிவுலைகளை அரசு கொண்டு வரக்கூடாது என்றும், இதனை அரசு கொள்கை முடிவாக எடுக்க வேண்டுமென்றும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக வலியுறுத்துகிறேன்.

The post வடசென்னையின் கொடுங்கையூரில் குப்பை எரிவுலை திட்டத்தை கைவிடுக: துரை வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article