திருச்சி: திருச்சியில் 159 ஆண்டு பழமையான ரயில்வே மேம்பாலம் இடித்து அகற்றப்பட்டுள்ளது. ரூ.34 கோடியில் புதிதாக பாலம் கட்டப்பட உள்ளது. திருச்சி சாலை ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் 1866ம் ஆண்டு சுண்ணாம்பு மற்றும் செங்கல் கட்டிடத்திலான வளைவு வடிவ மூலம் இருபக்க நடைபாதையுடன் 9 மீட்டர் அகலத்தில் ரயில்வே துறையால் கட்டப்பட்டது. 159 ஆண்டு பழமையான இந்த பாலம் தற்போது கனரக வாகன போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் இல்லாததாலும், பழுதடைந்ததாலும் பாலத்தை இடித்துவிட்டு தற்போதைய போக்குவரத்துக்கு ஏற்றாற்போல் அகலமாகவும், சற்று உயரமாகவும் பாலத்தை கட்ட மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.
இதைத்தொடர்ந்து நகர் ஊரமைப்பு துறையின் உள்கட்டமைப்பு மற்றும் வசதி நிதியின் கீழ், ரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து இந்த பாலத்தை 31.39 மீட்டர் நீளம், 20.70 மீட்டர் அகலத்தில் இருவழிப்பாதையாக கட்ட ரூ.34.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. பாலத்தின் கிழக்கு பகுதியில் 223.75 மீட்டர் நீளமும், 15.61. மீட்டர் அகலம் உடையதாகவும், மேற்கு பகுதியில் 225 மீட்டர் நீளமும், 15.61 மீட்டர் அகலமுடையதாக சாலையில் தடுப்பு சுவர்களுடன் விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. பாலத்தின் இருபகுதியிலும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
இப்பாலம் இருவழி பாதையாக கட்டப்படுவதால் மெயின்கார்டுகேட் பகுதியில் இருந்து தில்லைநகர், தென்னூர், புத்தூர் மற்றும் உறையூர் பகுதிகளுக்கு போக்குவரத்து இடையூறின்றி எளிதாக சென்று வரலாம். பாலப்பணிகளால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு கரூர் பைபாஸ், பாலக்கரை வழியாக வாகனங்கள் சென்று வருகிறது. இந்தநிலையில், ரயில்வே நிர்வாக எல்லையில் தண்டவாளத்தின் மேல் புதிதாக பாலம் கட்டுவதற்காக ஏற்கனவே இருந்த 159 ஆண்டு பழமையான மேம்பாலம் நேற்று 10 ராட்சத பொக்லைன் மூலம் முற்றிலும் இடித்து அகற்றப்பட்டது.
இதையொட்டி அந்த வழியாக கரூர் செல்லும் மற்றும் கரூரில் இருந்து வரும் ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டன. மேலும் பாலத்தை இடித்து அகற்றும் போது தண்டவாளம் சேதம் அடையாமல் இருக்க மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. இன்று தண்டவாளத்தில் மணல் மூட்டைகள் அகற்றப்பட்டு ரயில் போக்குவரத்து துவங்கியது.
The post திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகே 159 ஆண்டு பழமையான மேம்பாலம் இடிப்பு: ரூ.34 கோடியில் புதிதாக கட்டப்படுகிறது appeared first on Dinakaran.