
சென்னை,
வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 3வது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை இந்தாண்டு தமிழகத்தில் இயல்பைவிட அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ. வேலு, தா.மோ. அன்பரசன், செந்தில் பாலாஜி, மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, எஸ்.எம்.நாசர், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர் .
இந்தக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,
மரம் வெட்டும் உபகரணங்களை போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். மழை நீர் தேங்கும் இடங்களில் மோட்டார்கள், படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வார்டுகளிலும் மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய வாட்ஸ்ஆப் குழு உருவாக்க வேண்டும். மீட்பு பணிகளுக்கு தன்னார்வலர்களைப் பயன்படுத்த வேண்டும். அரசு அதிகாரிகள் எப்போதும் மக்களுடன் துணை நிற்கின்றனர் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்