
ராஞ்சி,
ஜார்கண்ட் மாநிலம் சாய்பாசாவில் 2018-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, அப்போதைய பா.ஜனதா தலைவர் அமித்ஷா பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார். இது தொடர்பாக அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. அங்குள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டில் இது பற்றிய வழக்கு நடந்து வருகிறது.
இதில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி, ராகுல்காந்தி தரப்பில் ஜார்கண்ட் ஐகோர்ட்டில் முறையிட்டனர். அவர்கள் பிடிவாரண்டை பல மாதங்கள் நிறுத்தி வைத்து இருந்தனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஐகோர்ட்டு ராகுல்காந்தியின் மனுவை தள்ளுபடி செய்ததால், கீழ் கோர்ட்டில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
மீண்டும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க ராகுல்காந்தியின் வக்கீல் முறையிட்டார். அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் ராகுல்காந்தி இன்று (திங்கட்கிழமை) நேரில் ஆஜராக வேண்டும் என்று ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுபிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதுபோன்ற மற்றொரு அவதூறு வழக்கு சுல்தான்பூர் கோர்ட்டிலும் நடந்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் அந்த கோர்ட்டில் ராகுல்காந்தி நேரில் ஆஜரானது குறிப்பிடத்தக்கது.