
அகமதாபாத்,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி மும்பையில் நேற்று முண்தினம் அறிவிக்கப்பட்டது.
இந்த மாதம் தொடக்கத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல். போட்டியில் கலக்கி வரும் தமிழகத்தை சேர்ந்த இடக்கை பேட்ஸ்மேன் சாய் சுதர்சன், வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் டெஸ்ட் அணிக்கு முதல்முறையாக அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சாய் சுதர்சனை அணியில் சேர்த்ததற்கான காரணம் குறித்து தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "ஐ.பி.எல். செயல்பாடு காரணமாக அவரை தேர்வு செய்யவில்லை. இங்கிலாந்து லயன்ஸ் அணி இந்தியா வந்தபோது அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். உயர்மட்ட திறனை வெளிப்படுத்தும் திறமை கொண்ட பேட்ஸ்மேனாக அவர் இருக்கிறார். நாங்கள் அவரை சிறிது காலமாகவே பார்த்து வருகிறோம் அதானலயே அவரை தேர்வு செய்தோம்" என்று கூறினார்.