வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்; முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 450 ரன்கள் குவிப்பு

2 months ago 11

ஆண்டிகுவா,

வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் ஆண்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்திருந்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக மைகி லூயிஸ் 97 ரன்களும், அதேன்சி 90 ரன்களும் எடுத்தனர். வங்காளதேச தரப்பில் அந்த அணியின் தஷ்கின் அகமது அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

இதையடுத்து 2வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 144.1 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 450 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 115 ரன்கள் எடுத்தார்.

வங்காளதேசம் தரப்பில் ஹசன் மஹ்மூத் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் நேற்றைய 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்துள்ளது. வங்காளதேசம் தரப்பில் மொமினுல் ஹக் 7 ரன்னுடனும், ஷஹாதத் ஹொசைன் திபு 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Read Entire Article