அமெரிக்காவை ஆட்டம் காண வைத்த சீனாவின் டீப்சீக்

2 hours ago 1

சென்னை,

செயற்கை நுண்ணறிவு இப்போது உலகம் முழுவதும் ஆக்கிரமித்துவிட்டது. எந்த தொழில் என்றாலும் அதில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு தொடங்கிவிட்டது. இதுவரை மனித மூளையில் இருந்தே சிந்தனைகள் உருவாகி எந்திரங்களுக்கு உத்தரவு பிறப்பித்து வந்தது. இனி மனித மூளைக்கே வேலையில்லை.

மனிதர்களைவிட பல நூறு மடங்கு வேகத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் எந்திரங்கள் தானாகவே செயல்படும் யுகம் தொடங்கிவிட்டது. இந்த நுண்ணறிவின் ஆரம்பக்கட்ட பணிகள் 1950-லியே தொடங்கிவிட்டது. செயற்கை நுண்ணறிவின் தந்தை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கம்ப்யூட்டர் விஞ்ஞானியான ஆலன் டூரிங்தான். இதற்கான கருத்துகளை அவர்தான் முன்வைத்தார். அப்போது அவர் எழுதிய ஒரு கட்டுரையில் கம்ப்யூட்டர்கள் மனிதனைப்போல சிந்திக்க முடியுமா? மனிதனைப்போல கேட்ட கேள்விகளுக்கு தானாக பதில் அளிக்க முடியுமா? என்ற கேள்விகளை எழுப்பினார். இந்த கேள்விகள்தான் அவரை தொடர்ந்து பல்வேறு விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக நடத்திய ஆய்வுகளின் விளைவாக செயற்கை நுண்ணறிவை உருவெடுக்க வைத்தது.

செயற்கை நுண்ணறிவு என்ற வார்த்தையை அமெரிக்க விஞ்ஞானியான ஜான் மெக்கார்த்தி 1956-ல் ஒரு மாநாட்டின்போது பயன்படுத்தினார். அன்று முதல்தான் இந்த சொற்றொடர் உலகம் முழுவதும் பரவத்தொடங்கியது. 1997-ல் ஐ.பி.எம். நிறுவனம் வடிவமைத்த செயற்கை நுண்ணறிவு கம்ப்யூட்டர் அப்போதைய உலக செஸ் சாம்பியன் கேரி காஸ்பரோவை செஸ் போட்டியில் தோற்கடித்தது. இதுதான் செயற்கை நுண்ணறிவு விஞ்ஞானிகளுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்துக்கு அடிகோலியது. இந்த பரிணாம வளர்ச்சியின் விளைவாகத்தான் 'ஓப்பன் ஏஐ' என்ற நிறுவனம் மக்கள் பயன்பாட்டுக்கு 'சாட் ஜிபிடி' என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி, பெரிய புரட்சியை மக்கள் மத்தியில் கொண்டுவந்தது.

இதைத்தொடர்ந்து கூகுள் நிறுவனத்தின் ஜெமினி, பேஸ்புக்கின் லாமா, ஆந்த்ரோபிக்கின் கிளவுடெ ஆகிய அமெரிக்க நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மென்பொருட்களை அறிமுகப்படுத்தி உலகம் முழுவதும் கோலோச்சினார்கள். இப்போது திடீரென உலகையே ஆச்சரிய வெள்ளத்தில் ஆழ்த்தும் வகையில் சீனாவின் டீப்சீக் செயற்கை நுண்ணறிவு செயலி ஆதிக்கம் செலுத்த வந்துவிட்டது. அமெரிக்க நிறுவனங்கள் அதிக பொருட்செலவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை உருவாக்கி, அதை பயன்படுத்தும் மக்களிடம் அதிக கட்டணத்தை வசூலிக்கிறார்கள். ஆனால் சீன செயலியான டீப்சீக் மிகக்குறைந்த கட்டணத்தில் உருவாக்கப்பட்டு, மக்களுக்கு செயற்கை நுண்ணறிவு சேவைகளை வழங்குகிறது. அதாவது தன் கதவை யார் வேண்டுமானாலும், அதன் சேவையை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் திறந்துவைத்துவிட்டது. இந்தியா இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தப்போகிறது.

சீனாவில் இதற்கான சிப் மற்றும் சர்வர்கள் ஆகியவற்றுக்கு குறைந்த தொகை செலவழிக்கப்பட்டதே இதற்கு காரணம். டீப்சீக் காலடியெடுத்து வைத்த உடனேயே அமெரிக்காவில் உள்ள செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கு அதிக திறன்கொண்ட சிப்களை சப்ளை செய்யும் நிவிடா நிறுவனத்தின் பங்குகள் 17 சதவீதம் அதாவது ரூ.46 லட்சம் கோடி வீழ்ச்சியடைந்தது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூட 'இது அமெரிக்க செயற்கை நுண்ணறிவு கம்பெனிகளை தூக்கத்தில் இருந்து தட்டி எழுப்பும் அலாரம்' என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். இந்த பந்தயத்தில் இந்தியாவும் இப்போது நுழைந்துவிட்டது. இன்னும் 10 மாதங்களுக்குள் டீப்சீக் போல இந்தியாவும் செயற்கை நுண்ணறிவு மாடலை உருவாக்கிவிடும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்து இருப்பது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article