சென்னை,
'தேஜாவு' படத்தின் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'தருணம்'. கிஷன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுமிருதி வெங்கட் நடித்துள்ளார். ஜென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் தயாரிக்கும் இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பால சரவணன், ராஜ் அய்யப்பன், கீதா கைலாசம், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், கிஷன் தாஸ் நடித்துள்ள 'தருணம்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
மத்திய ஆயுதப்படை போலீஸ் அதிகாரி கிஷன்தாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கி சண்டையில் அஜாக்கிரதையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு மேலதிகாரிகளின் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். இதற்கிடையில் சுமிருதி வெங்கட்டுடன் அவருக்கு காதல் மலர்ந்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கிறார்கள். அப்போது சுமிருதி வெங்கட் வீட்டில் பக்கத்து வீட்டு இளைஞன் பிணமாக கிடக்கிறான்.
பிணத்தை மறைத்து காதலியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார் கிஷன் தாஸ். இளைஞன் இறந்தது எப்படி? அவரை சுமிருதி வெங்கட் கொலை செய்தாரா? போலீசில் சிக்காமல் அவரால் தப்பிக்க முடிந்ததா? என்பது மீதி கதை.
நாயகன் கிஷன்தாஸ் வேகமும், விவேகமும் நிறைந்த கதாபாத்திரத்தை ரசித்து செய்துள்ளார். சக அதிகாரியை சுட்டதும் வேதனை, காதலியை கொலைப்பழியில் இருந்து காப்பாற்ற புத்திசாலித்தனமாக காய்கள் நகர்த்தல் என்று நடிப்பில் கவர்கிறார். சுமிருதி வெங்கட் அழகிலும் நடிப்பில் வசீகரிக்கிறார். ஆரம்பத்தில் காதலில் திளைக்கும் அவர் பிற்பகுதியில் அதிர்ச்சி, பதற்றத்தை முகத்தில் நேர்த்தியாக கடத்தி கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறார்.
கிஷன்தாஸ் நண்பராக வரும் பால சரவணன் சிரிக்க வைக்கிறார். கீதா கைலாசம், ராஜ் ஐயப்பா ஆகியோர் கதைக்கு திருப்புமுனையான நடிப்பை வழங்கி உள்ளனர். தர்பூகா இசையில் பாடல்கள் கேட்கலாம். அஸ்வின் ஹேமந்த் திரில்லர் கதைக்கு தேவையான பின்னணி இசையை கொடுத்துள்ளார். ராஜா பட்டாச்சார்ஜி கேமராவில் காட்சிகள் நேர்த்தி.
சில காட்சிகளில் தொய்வு இருந்தாலும் முதல் பாதி காதல், பிற்பகுதியில் கொலை, திரில்லர் என்று சஸ்பென்ஸ் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக கதையை நகர்த்தி திறமையான இயக்குனராக கவனம் பெறுகிறார், அரவிந்த் ஶ்ரீனிவாசன்.