காசியாபாத்,
உத்தர பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில் தானா தீலா மோத் பகுதியில் டெல்லி-வசீராபாத் செல்லும் சாலையில் போபுரா சவுக் என்ற இடத்தில் லாரி ஒன்று கியாஸ் சிலிண்டர்களை ஏற்றி கொண்டு சென்றது. அப்போது, திடீரென சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்தன. இதுபற்றி தகவல் அறிந்ததும், தீயணைப்பு துறையினர் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். ஆனால், தொடர்ந்து சிலிண்டர்கள் வெடித்தபடி இருந்தன. இதனால், அவர்களால் லாரியை நெருங்க முடியவில்லை.
சிலிண்டர் வெடித்த சத்தம் பல கிலோ மீட்டர்கள் தொலைவுக்கு கேட்டது என தலைமை தீயணைப்பு துறை அதிகாரி ராகுல் குமார் கூறினார். இதுபற்றிய வீடியோ ஒன்று 2 முதல் 3 கிலோ மீட்டர்கள் தொலைவில் இருந்து எடுக்கப்பட்டது. சிலிண்டர்கள் வெடித்ததற்கான காரணம் என்னவென உறுதி செய்யப்படவில்லை.