வக்பு திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஹமாஸ் ஆயுதக்குழு தலைவர் புகைப்படம்; கேரளாவில் பரபரப்பு

1 week ago 1

திருவனந்தபுரம்,

வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதாகக் கூறி, வக்பு வாரிய சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்தது.

இந்த சட்டத் திருத்த மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. குடியரசுத் தலைவர் கடந்த 5-ம் தேதி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததார். அதன்பின் அரசிதழில் வெளியிடப்பட்டு வக்பு திருத்தச் சட்டம்-2025 அமலுக்கு வந்துள்ளது.

இதற்கிடையே, வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அடுத்தடுத்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஜமியத் உலமா-இ-ஹிந்த் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என 10 பேர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு தரப்பில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது வரும் 16ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற உள்ளது. அதேவேளை, வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டம் கரிப்பூர் பகுதியில் ஜமாத் இ இஸ்லாமி என்ற இஸ்லாமிய அமைப்பு சார்பில் இன்று கண்டன போரட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின்போது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் யாஹ்யா சின்வரின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. ஹமாஸ் , இஸ்ரேல் இடையே நடைபெற்றுவரும் போரில் சின்வர் கடந்த சில மாதங்களுக்குமுன் இஸ்ரேல் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

யாஹ்யா சின்வர் மற்றும் சர்வதேச அளவில் பல நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட இஸ்லாமிய பிரதர்ஹுட் அமைப்பின் தலைவர் ஷேக் ஹசன் அல் பனாவின் புகைப்படமும் இந்த போராட்டத்தில் இடம்பெற்றது, அதேபோல், 2020 டெல்லி வன்முறையில் மூளையாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள உமர் காலிதின் புகைப்படமும் போராட்டத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்காத நிலையில் இது தொடர்பாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த போராட்டம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.    இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article